Published : 30 Jun 2018 05:46 PM
Last Updated : 30 Jun 2018 05:46 PM

வழக்கை முடிவுக்கு கொண்டு வர அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுடன் விஜய் மல்லையா பேரம்?

வங்கி கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் பேரம் பேசியதாக தகவல் வெளியான நிலையில், இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பல்வேறு பொத்துறைகளில் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவர்மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரி, சிபிஐ நீதிமன்றமும் தனித்தனியாக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளன.

அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் மல்லையாவின் ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது. இதனிடையே, விஜய் மல்லையா மீது லண்டன் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் அமலாக்கப்பிரிவு, சிபிஐ தரப்பில் வழக்குத் தொடரப்பட்டு நடந்து வருகிறது. இந்த வழக்கில் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவருவது குறித்த தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடனைச் திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக மத்திய அரசுக்கு விஜய் மல்லையா சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் கடனை திருப்பிச் செலுத்தி வழக்குகளை வேகமாக முடிக்க விஜய் மல்லையா விரும்புவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் சிலரிடம் அவர் பேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்திவிட்டால்,  பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விடுவிப்பதுடன், லண்டன் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கையும் திரும்ப பெற வேண்டும் என மல்லைய கோரிக்கை விடுத்தாக கூறப்படுகிறது. ஆனால் இதை ஏற்க முடியாது எனவும், அவர் உடனடியாக இந்தியா வந்து சரணடைய வேண்டும் எனவும் கூறி அமலாக்கத்துறை மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளி வந்தன.

ஆனால இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘நான் பேரம் பேசி வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக ஊடங்களில் செய்தி வெளியானதை பார்த்து அதிர்ந்து போனேன். நான் யாரிடமும் பேரம் எதையும் பேசவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. எனது சொத்துக்களை முடக்கி வைத்துள்ள நீதிமன்றத்தில், அமலாக்கத்துறையினர் இதை கூறட்டும். நான் பேரம் பேசி வருவதாக நீதிமன்றத்தில் கூறினால் அதை நான் வரவேற்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x