

அமராவதி: திருப்பதி தேவஸ்தானத்துடன் வக்பு வாரியத்தை ஒப்பிடக் கூடாது என்று ஒவைசி கருத்துக்கு புதிய அறங்காவலர் குழு தலைவர் பதில் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் எம்பியும், ஏஐஎம் ஐஎம் கட்சியின் தலைவருமான அசதுத்தீன் ஒவைசி கடந்த வாரம் கூறுகையில், "வக்பு வாரிய திருத்த சட்டத்தில் தற்போதைய மோடி அரசு, சில புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத வேற்று மதத்தினர் இருவரை நியமிக்க வேண்டும். இதை நான் ஏற்க மாட்டேன். ஏனெனில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தற்போது இடம்பெற்றுள்ள 25 பேரும் இந்துக்களே. இதில் வேற்று மதத்தினருக்கு இடம்பெறவில்லை.
அப்படி இருக்கையில் வக்புவாரியத்தில் மட்டும் இந்துக்களை இடம்பெற வைப்பது எப்படி நியாயமாகும்? வக்பு வாரியத்தில் மட்டும் இந்துக்களை நியமிக்க வலியுறுத்துவது ஏன்? ” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.ஆர். நாயுடு பதில்அளிக்கையில், “திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் வக்பு வாரியத்தை ஒப்பிடக்கூடாது. வக்பு வாரியம் பெரும்பாலும் நிலத்தை நிர்வகிப்பது தொடர்பானது. திருப்பதி தேவஸ்தானம் ஒரு மதத்தின் சனாதன தர்மங்களுக்கு உட்பட்டது. இவை இரண்டும் ஒன்றல்ல.
இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தவர் யாரும் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்ற கூடாது என பல ஆண்டுகளாக பக்தர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சனாதன தர்மமும், வேற்று மதத்தவர்களை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிய அனுமதிக்காது.
ஆதலால், திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் அறங்காவலர் குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும். வேற்று மத ஊழியர்களை கோயில் பணிகளில் இருந்து நீக்கி, மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும்படி செய்யலாமா அல்லது அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசுடன் கலந்துபேசி இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.