

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்ட காவல்துறை சார்பில் இணைய தளத்தில் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளன. இதில் இதுவரை வந்த 67 புகார்களில் 47 புகார்களுக்கு தீர்வுகண்டு இதன் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
‘அலகாபாத் போலீஸ்’ என்ற பெயரில் 3 மாதங்களுக்கு முன்பு இந்தப் பக்கம் தொடங்கப் பட்டுள்ளது. இதை இதுவரை 667 பேர் பார்த்ததுடன் 3,327 பேர் இதில் பல்வேறு இணைதொடர்புகள் மூலம் ‘லைக்’ கொடுத்துள்ளனர்.
இந்த பேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் புகார்களை அதை நிர்வகிப்பவர் தொடர்புடையை காவல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கிறார். இந்தப் புகார்கள் மீது அந்தந்த காவல்நிலைய போலீஸார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண்கின்றனர். இதனால் இந்த பேஸ்புக் பக்கம் அம்மாவட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் போலீஸார் உடனுக்குடன் பதிவேற்றுகின்றனர். இதில் ஒருசில மனுதாரர்கள் நன்றி கூறியுள்ளனர். பலர் போலீஸாரை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களைப் பாராட்டி பத்திரிகைகளில் வரும் செய்திகள் மற்றும் படங்களையும் பேஸ்புக் பக்கத்தில் பார்க்க முடிகிறது. இந்த செய்தி மற்றும் படங்களை இவர்கள் ஸ்கேன் செய்து பதிவேற்றுகின்றனர்.
இதுகுறித்து அலகாபாத் மண்டல ரயில்வே ஐ.ஜி. எல்.வி. ஆன்டனி தேவ்குமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, “நவீன காலத்துக்கு ஏற்றவாறு அலகாபாத் காவல் நிலையங்களை மாற்றும் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் வரும் புகார்களை முடிந்தவரை வேகமாக தீர்த்துவைக்கின்றனர். கங்கை- யமுனை-சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் புண்ணிய நகரம் அலகாபாத். இங்குள்ள திரிவேணி சங்கமத்துக்கு தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இவர்களுக்கும் இந்த பேஸ்புக் பக்கம் உதவியாக இருக்கும்” என்றார். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் தமிழ்நாட்டின் நாகர்கோவிலை சேர்ந்தவர்.
இந்த பேஸ்புக் பக்கத்தில், பல்வேறு குற்றங்களில் அலகாபாத் போலீஸார் கைது செய்யும் நபர்கள், கைப்பற்றப்படும் பொருள்கள் போன்ற விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.