

ஜம்மு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடந்த 5 நாட்களில் 4-வது முறையாக காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளனர்.
ஜம்மு மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது நேற்று இரவு பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஆர்.எஸ்.புரா பகுதியில் துப்பாக்கி சூடு நடத்திய பாகிஸ்தான் படையினர் நள்ளிரவு 1 மணியளவில் தாக்குதலை நிறுத்தினர். பின்னர் மீண்டும் அதிகாலை 3 மணியளவில் மீண்டும் தாக்குதலை தொடர்ந்ததாகவும், அங்கிருக்கும் கிராமங்களை நோக்கியும் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் 5 பேரின் மீது சிறிய ரக துப்பாக்கிகள், தானியங்கி ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இந்தியத் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 நாட்களில் இந்திய எல்லை மீது பாகிஸ்தான் ராணுவம் 4-வது முறையாக அத்துமீறியுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவ படையினர் பதிலடி கொடுத்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நேற்று காஷ்மீர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, லே மாவட்டத்தில் ஆற்றிய உரையின்போது, இந்தியாவுடன் நேரடியாக மோத பலமில்லாததால் தீவிரவாதம் மூலம் பாகிஸ்தான் மறைமுக போரிட்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறியுள்ளது எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.