திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழகத்தில் இருந்து 2 பேர் நியமனம்

திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழகத்தில் இருந்து 2 பேர் நியமனம்
Updated on
1 min read

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 உறுப்பினர்கள் கொண்ட புதிய அறங்காவலர் குழுவை சந்திரபாபு நாயுடு அரசு அறிவித்துள்ளது இதில் தெலங்கானாவில் இருந்து 5 பேரும் தமிழகத்தில் இருந்து இருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒவ்வொரு முறையும் புதிய அறங்காவலர் குழு அறிவிக்கும் போதெல்லாம் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆந்திர முதல்வருக்கு சிபாரிசுகள் வருவது வழக்கம். இதன் அடிப்படையில் இம்முறை தெலங்கானாவை சேர்ந்த 5 பேருக்கு சந்திரபாபு வாய்ப்பு அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் இருந்து 3 பேருக்கும் தமிழகத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி, சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 25 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அறங்காவலர் குழு தலைவர்: அறங்காவலர் குழுவின் தலைவர் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பி.ராஜகோபால் நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் தலைவர் ஆவார். இந்த நியமனம் குறித்து பி.ஆர். நாயுடு கூறுகையில், "முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு எனது மனமார்ந்த நன்றி. கடந்த ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை நான் அறிவேன். நான் எந்தவொரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்காமல், அறங்காவலர் குழுவில் விவாதித்து எடுப்பேன். திருமலையில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பது எனது கருத்தாகும். இதுகுறித்தும் அறங்காவலர் குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும்" என்றார். இதனால் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட வேற்றுமத ஊழியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சுவாமியை தரிசிக்க 24 மணி நேரம்: சனி, ஞாயிறு வார இறுதி நாட்களை முன்னிட்டும் தொடர் பண்டிகை விடுமுறை என்பதாலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அன்னதானம், தங்கும் விடுதி, தலைமுடி காணிக்கை செலுத்தும் இடம், லட்டு பிரசாத மையம் என அனைத்து இடங்களிலும் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது. இதனால் சுவாமியை பக்தர்கள் நேற்று தரிசனம் செய்ய 20 முதல் 24 மணி நேரம் வரை ஆனது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in