

ரஷ்ய ராணுவத்துக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களை வழங்கியதாகக் கூறி 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் இந்தியா எந்த விதிகளையும் மீறவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “இந்திய நிறுவனங்கள் சிலவற்றின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தியா வெளிநாடுகளுடனான வர்த்தக உறவில் சரியான விதிமுறைகளைக் கொண்டுள்ளது. இந்திய நிறுவனங்கள் எந்த விதியையும் மீறவில்லை. இந்திய நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை குறித்து தெளிவு பெற அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்தது. ரஷ்யாவுக்கு எந்த நாடுகளும் ராணுவ ரீதியாக உதவிகள் வழங்கக் கூடாது என்று தெரிவித்தது.
இந்நிலையில், ரஷ்யாவின் ராணுவத்துக்கு உதவும் வகையில் சரக்குகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்ததாக 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
டிஎஸ்எம்டி நிறுவனத்தின் இயக்குநர் ராகுல் குமார் சிங் கூறுகையில், “ஏன் எங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது என்பது புரியவில்லை. நாங்கள் அமெரிக்காவுடன் எந்த வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை. நாங்கள் ஆட்டோமொபைல் பாகங்கள், மின்னணு பாகங்கள் உள்ளிட்டவற்றை ரஷ்யாவுக்கு விநியோகம் செய்கிறோம். நாங்கள் இந்திய விதிகள் எதையும் மீறவில்லை. வழக்கம்போல் எங்கள் வர்த்தகம் தொடரும்” என்று தெரிவித்தார்.