

புதுடெல்லி: ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின்போதும் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார்கள். இப்போது, மக்கள் முன் மோசமாக அம்பலமாகி நிற்கிறார்கள் என்ற பிரதமர் நரேந்திர மோடியில் விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கே, “பொய், வஞ்சகம், போலித்தனம், கொள்ளை மற்றும் விளம்பரம் ஆகியவை உங்கள் அரசாங்கத்தை சிறப்பாக விவரிக்கும் 5 வார்த்தைகள். 100 நாள் திட்டத்தைப் பற்றி நீங்கள் முழக்கமிட்டது ஒரு மலிவான பிஆர் ஸ்டன்ட். மே 16, 2024 அன்று, 2047-க்கான சாலை வரைபடத்திற்காக 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துகளை பெற்றதாகக் கூறினீர்கள். ஆர்டிஐ கேள்வியில் பிரதமர் அலுவகம் அறிக்கை தாக்கல் செய்த மறுத்ததன் மூலம், உங்கள் பொய்கள் அம்பலமாகின.
இந்தியாவின் வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது ஏன்? ஒருசில வேலைகள் காலியாக இருக்கும் இடங்களிலெல்லாம் ஏன் கடும் நெரிசல்கள் காணப்படுகின்றன? 7 ஆண்டுகளில் 70 பேப்பர் கசிந்ததற்கு யார் பொறுப்பு? பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று 5 லட்சம் அரசு வேலைகளை பறித்தது யார்?
வீட்டுச் சேமிப்பு ஏன் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்தது? தக்காளி விலை 247%, உருளைக்கிழங்கு 180% மற்றும் வெங்காயம் 60% அதிகரித்தது எப்படி? பால், தயிர், கோதுமை மாவு, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்தது யார்? வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதன் மூலம் நடுத்தர வர்க்கத்தை தண்டிப்பது யார்?
உங்கள் அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 லட்சம்+ கோடிகளை கடனாகப் பெற்றுள்ளது. ஒவ்வொரு இந்தியர் மீதும் ரூ.1.5 லட்சம் கடன் சுமை உள்ளது. பொருளாதார சமத்துவமின்மை 100 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி 6% க்கும் குறைவாக உள்ளது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இது 8% ஆக இருந்தது. தனியார் முதலீடு கடந்த பத்தாண்டுகளில் உற்பத்தித் துறையில் சராசரி வளர்ச்சி வெறும் 3.1% ஆக உள்ளது. அதே சமயம் காங்கிரஸ் ஆட்சியில் இது 7.85% ஆக இருந்தது” என்று கார்கே தெரிவித்துள்ளார்.
முன்னதாக பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்துள்ளதாகவும், உங்களால் முடிந்த அளவு மட்டும் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். 5, 6, 10 அல்லது 20 உத்தரவாதங்களை அறிவிக்கக் கூடாது என்று கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை கடுமையான விமர்சிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது, ஆனால் அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினம் அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் அவர்கள் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின்போதும் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார்கள். இப்போது, மக்கள் முன் மோசமாக அம்பலமாகி நிற்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.