

செனாப் நதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் படகுக் கோளாறினால் நதிநீரில் அடித்துச்செல்லப்பட அவரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச் சென்றது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே செனாப் நதியில் ரோந்துப் பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர் பெருக்கெடுத்த செனாப் நதியில் அடித்துச் செல்லப்பட்டார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் நீர் எல்லைப்பகுதியில் பணியாற்றி வருகிறார் சத்யஷீல் யாதவ் என்ற இந்த வீரர். இவர் மற்றும் 3 பேர் பரக்வால்-கோவ்ர் சப்-செக்டார் பகுதியில் படகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது படகில் பிரச்சினைகள் தோன்றியது. அப்போது நதியில் குறுகலான வளைவு ஒன்றில் திரும்பும்போது படகின் எஞ்சின் நின்று போனது.
உடனடியாக மீட்புப் படகு அனுப்பப்பட்டது. இதில் 3 பேர் காப்பாற்றப்பட்டனர். ஆனால் யாதவ் கட்டியிருந்த கயிறு அறுந்து போகவே நதிநீரில் அவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் பாகிஸ்தானின் சியால்கோட்டிற்கு 400கிமீ அருகே கரைசேர்ந்தார். அங்கு பாகிஸ்தான் ராணுவம் அவரைப் பிடித்துச் சென்றது.
இது குறித்து பி.எஸ்.எஃப். தலைமை அதிகாரி டி.கே.பதக் கூறும்போது, “பாகிஸ்தான் படை அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம், விரைவில் அவர்களைச் சந்தித்து ராணுவ வீரரை திரும்பவும் மீட்போம்” என்று உறுதி அளித்துள்ளார்.