மோசமான ரயில் கழிப்பறை: பயணிக்கு ரூ.25 ஆயிரம் அளிக்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

மோசமான ரயில் கழிப்பறை: பயணிக்கு ரூ.25 ஆயிரம் அளிக்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

மோசமான ரயில் கழிப்பறை விவகாரம் தொடர்பாக பயணிக்கு ரூ.25 ஆயிரம் அளிக்குமாறு விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி தனது குடும்பத்தாருடன் திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதியிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் வந்து கொண்டிருந்தார். இவர் 3-வது ஏ.சி.வகுப்பில் பயணம் செய்தார்.

அப்போது அவர் பயணித்த பெட்டியின் கழிப்பறை மோசமான நிலையில் இருந்தது. கழிப்பறையில் தண்ணீரும் வரவில்லை. மேலும், அவர் பயணித்த ரயில் பெட்டியின் ஏ.சி.யும். சரியாக வேலை செய்யவில்லை.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் புகார் செய்தார். அப்போது அங்கு வந்த ஊழியர்கள் ஏ.சி. பிரச்சினையை சரி செய்ய முயன்றனர். ஆனால் அது சரியாகவில்லை. இதைத் தொடர்ந்து துவ்வாடா நகரிலுள்ள ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது அங்குள்ள அலுவலகத்திலும் மூர்த்தி புகார் செய்தார். அப்போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவுசகரியமான முறையில் பயணம் செய்யவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

ஏ.சி. பிரச்சினை, கழிப்பறையில் தண்ணீர் வராதது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மூர்த்தி, விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையம், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவுகளுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்குமாறு தென் மத்திய ரயில்வே (எஸ்சிஆர்) மண்டலத்துக்கு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கிய உத்தரவில் கூறியுள்ளதாவது: பயணிகள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணம் செய்வதற்காக ரயில்வே நிர்வாகம் கட்டணம் வசூலிக்கிறது. இந்நிலையில் அடிப்படை வசதிகளான கழிப்பறையில் தண்ணீர் வசதி, ஏ.சி. வசதி, சரியான சூழல் போன்றவற்றை வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் கடமைப்பட்டுள்ளது. ஆனால் மூர்த்தி பயணித்த ரயிலில் பிரச்சினைகள் இருந்துள்ளன.

இதையடுத்து மூர்த்திக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவுகளுக்காக ரூ.5 ஆயிரமும் தென் மத்திய ரயில்வே வழங்கவேண்டும். இவ்வாறு ஆணையம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in