

டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வகையான இணையவழி மோசடிகள் குறித்து பிரதமர் மோடி மன்கிபாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். இதிலிருந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளின் மூலமாக இந்தியர்கள் ரூ.120 கோடி வரை இழந்துள்ளது அரசு புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி (ஐ4சி) ராஜேஷ் குமார் கூறியுள்ளதாவது: கடந்த 2023-ம் ஆண்டில் பல்வேறு இணையவழி மோசடிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 15 லட்சம் புகார்கள் பெறப்பட்டன. இந்த நிலையில், நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை முதல் நான்கு மாதங்களில் மட்டும் 7.4 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2022-ல் 9.60 லட்சமாக இருந்தது. இது, 2021-ல் பதிவான புகார்களை காட்டிலும் 4.5 லட்சம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
நடப்பாண்டின் முதல் காலாண்டில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக மிரட்டி இந்தியர்களிடமிருந்து ரூ.120.3 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, இணையவழி வர்த்தகம் என்ற பெயரில் ரூ.1,420.48 கோடி சுருட்டப்பட்டுள்ளது. மேலும், முதலீட்டு மோசடியால் ரூ.222.58 கோடியையும், ரொமன்ஸ் மோசடியால் ரூ.13.23 கோடியையைும் இந்தியர்கள் பறிகொடுத்துள்ளனர்.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட 46 சதவீதம் பேர் மியான்மர், லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து தங்களது கைவரிசையை காட்டியுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.