

ஹைதராபாத் நகரில் சட்டம் ஒழுங்கை காப்பதில் மாநில ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கச் செய்யும் மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த முடியாது என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.
ஆந்திரம், தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களுக்கும் பொது தலைநகராக ஹைதராபாத் இருக்கும் நிலையில், அங்குள்ள மக்களை பாதுகாக்கும் சிறப்பு பொறுப்பு, ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014, பிரிவு 8-ன் கீழ் மாநில ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, முக்கிய இடங்களின் பாதுகாப்பு, அரசு அலுவல கங்கள் ஒதுக்கீடு, நிர்வாகம் உள்ளிட்ட அதிகாரங்கள் இதன் கீழ் வருகின்றன.
இந்நிலையில் தெலங்கானா தலைமைச் செயலாளர் ராஜீவ் சர்மாவுக்கு மத்திய உள்துறை இணைச் செயலாளர் சுரேஷ் குமார் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில், மேற்கண்ட சட்டப்பிரிவின் கீழ் சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவுகளை எத்தகைய சூழ்நிலையிலும் ஏற்கவோ, செயல்படுத்தவோ மாட்டோம் என்று தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெலங்கானா தலைமைச் செயலாளர் சனிக்கிழமை எழுதிய கடிதத்தில், இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், “ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் வழங்குவது, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களின் கீழ் தெலங்கானா அரசு செயல்படுகிறது. மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஏற்பவே ஆளுநர் செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.