முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன் குடியரசு துணைத் தலைவர் சந்திப்பு

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன் குடியரசு துணைத் தலைவர் சந்திப்பு
Updated on
1 min read

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவை அவரது இல்லத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் சந்தித்துப் பேசினார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மனைவி சுதேஷ் தங்கருடன் பெங்களூரு வந்த குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவ கவுடாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

விவசாய பின்னணியைச் சேர்ந்த இருவரும் நாட்டின் வளர்ச்சிப் பயணம் குறித்தும், விவசாயத் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்தும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேவ கவுடாவின் மனைவி சென்னம்மாவின் உடல்நிலை குறித்து விசாரித்த குடியரசு துணைத் தலைவர், அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, தேவகவுடாவின் மகனும், மத்திய அமைச்சருமான குமாரசாமி உடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, "முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரும் நெருங்கிய நண்பர்கள். இந்த சந்திப்பின்போது அவர்கள் தங்களுக்குள் இருக்கும் பரஸ்பர மரியாதை மற்றும் அன்பை பகிர்ந்து கொண்டார்கள். குடியரசு துணைத் தலைவர், முன்னாள் பிரதமர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இருவருமே விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களின் உரையாடலின் மையப் பொருளாக விவசாயத்தின் முக்கியத்துவம் இருந்தது. விவசாயத்துறையில் ஏற்பட்டு வரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து இருவரும் விவாதித்தார்கள்.

கடந்த முறை பெங்களூரு வந்தபோதே அவர் இந்தச் சந்திப்புக்கு திட்டமிட்டார். எனினும், தற்போதுதான் அது நிகழ்ந்தது. இந்த சந்திப்பின்போது உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எனது தாயாரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர் விரைவில் பூரண குணமடைய தனது வாழ்த்தையும் தெரிவித்தார்" என குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in