Last Updated : 25 Aug, 2014 02:12 PM

 

Published : 25 Aug 2014 02:12 PM
Last Updated : 25 Aug 2014 02:12 PM

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ஷீலா தீட்சித்?- மத்திய உள்துறை அமைச்சருடன் திடீர் சந்திப்பு

கேரள ஆளுநர் ஷீலா தீட்ஷித், டெல்லியில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இதன்மூலம், அவர் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாகக் கூறப்படுகிறது.

சுமார் 15 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஷீலா தீட்சித் கூறும்போது, “நான் ராஜினாமா செய்யப் போவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அது வெறும் புரளிதான்” என்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட பிற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

இதற்கிடையே குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியையும் ஷீலா தீட்சித் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நியமிக்கப் பட்ட ஆளுநர்களை மாற்றும் முயற்சியில் நரேந்தர மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யுமாறு சில ஆளுநர்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இதன்படி சிலர் பதவி விலகினர். சிலர் பதவி விலக மறுத்தனர்.

இதற்கிடையே, கடந்த ஜூலை 14-ல் பாஜக மூத்த தலைவர்கள் நான்கு பேர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

இரண்டாவது பட்டியலை உள்துறை அமைச்சகம் தயாரித்து வரும் நிலையில், ராஜ்நாத்த் சிங்கை ஷீலா சந்தித்துப் பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகார வட்டாரங்கள் கூறும்போது, “டெல்லியில் முதல்வராக இருந்த ஷீலா மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன.

ஆனால் ஆளுநராக இருப்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் தாமாக முன்வந்து ராஜினாமா செய்யும் சூழலை உருவாக்குவதற்காக அவரை வட கிழக்கு மாநிலங்களுக்கு மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது” என தெரிவித்தனர்.

மகராஷ்டிர ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வந்த கே.சங்கரநாராயணன், கடந்த சனிக்கிழமை இரவு வடகிழக்கு பகுதியில் உள்ள மிசோராமுக்கு மாற்றப்பட்டார்.

இதை ஏற்க மறுத்த அவர், ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் ஷீலாவையும் வடகிழக்கு மாநிலத்துக்கு மாற்றினால் அவரும் தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக பதவி வகித்தவர் ஷீலா. இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

இதனால் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஷீலா தீட்சித்தை கேரள ஆளுநராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்தது.

இப்போது, கர்நாடகா, ராஜஸ்தான், கோவா, திரிபுரா, மிசோராம், புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆளுநர்கள் பதவி காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x