

புதுடெல்லி: வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என பெண்கள் சக்தி என்னை ஊக்குவிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
பாஜக துணைத் தலைவரும் ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மக்களவை தொகுதி உறுப்பினருமான வைஜெயந்த் ஜெய் பாண்டா எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அத னுடன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கையின்போது, இந்த பழங்குடியின பெண் என்னை சந்தித்தார். அப்போது வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடிக்கு என் சார்பில் நன்றி தெரிவிக்க வேண்டும் எனக்கூறி ரூ.100-ஐ அன்பளிப்பாக என்னிடம் கொடுத்தார். பணத்தை வாங்க மறுப்பு தெரிவித்தபோது, உங்கள் விளக்கம் தேவையில்லை எனக்கூறி திணித்து விட்டார். இது ஒடிசா மாநில மற்றும் இந்திய மக்கள் அனுபவித்துவரும் மாற்றத்தின் பிரதிபலிப்பு ஆகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்தப் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், “எப்போதும் என்னை ஆசீர்வதிக்கும் நமது பெண் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களுடைய ஆசீர்வாதம், வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று என்னை ஊக்குவிக்கிறது” என கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 147-ல் 78 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக முதல் முறை யாக ஆட்சியைப் பிடித்தது. மோகன் சரண் மாஜி முதல்வரானார். இதன்மூலம் பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் தலைமையிலான 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.