உத்தராகண்ட் கன்சர் நகரில் இருந்து 15 முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற வர்த்தக சங்கம் தீர்மானம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ளது கன்சர் நகர். இங்கு முஸ்லிம் குடும்பங்கள் குறைந்த அளவில் உள்ளன. இவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இங்குள்ள இந்து வியாபாரிகளுக்கும், முஸ்லிம் வியாபாரிகளுக்கும் இடையே தொழில் போட்டி, விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கன்சர் பகுதி வியாபாரிகள் இங்குள்ள மைதான் சந்தையில் சமீபத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். அதன் பின் நடந்த வர்த்தக சபை கூட்டத்தில், ‘கன்சர் நகரில் வசிக்கும் 15 முஸ்லிம் குடும்பத்தினர் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மைதான் சேவா சமிதி தலைவர் வீரேந்திர சிங் கூறுகையில், "இந்து பெண்களுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானத்தை ஒருமனதாக கொண்டுவந்துள்ளோம். இங்கு வசிக்கும் 15 முஸ்லிம் குடும்பத்தினர் டிசம்பர் 31-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். இங்கு முஸ்லிம்கள் வியாபாரம் செய்தால் அவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

இது குறித்து முஸ்லிம் ஒருவர் கூறுகையில், “நாங்கள் யாரும் எந்த குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியாகவும். இந்து வணிகர்களின் வர்த்தகம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் இந்த தீர்மானம் கொண்டுவரப் பட்டுள்ளது” என்றார்.

இது குறித்து சமோலி போலீஸ் எஸ்.பி. சர்வேஸ் பன்வார் கூறுகையில், “இச்சம்பவம் பற்றி எங்களுக்கு தகவல் தெரியாது. இது குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்போம்” என்றார். சமோலி மாவட்டத்தின் நந்த் காட் என்ற இடத்தில் முஸ்லிம் கடைகள் மீது கடந்த செப்டம்பர் மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. முஸ்லிம் இளைஞர் ஒருவர் தொந்தரவு கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. கோபேஸ்வர் நகரில் இந்துத்துவ அமைப்புகள் பேரணியும் நடத்தின. இதையடுத்து பாஜக நிர் வாகி உட்பட 10 முஸ்லிம் குடும்பங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் கன்சர் நகரிலும் இப்பிரச்சினை எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in