Published : 03 Jun 2018 08:08 AM
Last Updated : 03 Jun 2018 08:08 AM

தீவிரவாதிகள் தாக்குவார்கள் என்ற அச்சத்தால் காஷ்மீர் அரசியல்வாதிகள் இரட்டை வேடம்: மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் குற்றச்சாட்டு

தீவிரவாதிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சத்தால் காஷ்மீர் அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுகின்றனர் என்று மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் பிற்பகலில் தொழுகைக்குப் பிறகு முஸ்லிம்கள் திடீர் போராட்டத்தை நடத்தினர். அந்த வழியாக வந்த சிஆர்பிஎப் வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது போராட்டக்காரர் ஒருவர் சிஆர்பிஎப் ஜீப்பின் அடியில் சிக்கிக் கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

இறந்த அந்த இளைஞரின் பெயர் கைசர் பட் என்பதும் அவர் பதே-இ-கதல் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள் ளது. இளைஞர் ஒருவர் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டது தெரிந்தும் சிஆர்பிஎப் வீரர்கள் வாகனத்தை ஓட்டியதற்கு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தார்.

ஒமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீரில் போர் நிறுத்தம் என்றால் துப்பாக்கிகளை பயன்படுத்தக்கூடாது. ஆனால் அரசு அதிகாரிகள், சிஆர்பிஎப் வீரர்கள் ஜீப்களை பயன்படுத்தலாம் என்பதா என்று ட்விட்டரில் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து உதம்பூர் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஜிதேந்திரா சிங் கூறும்போது, “ஒமர் அப்துல்லா பேசியுள்ளது காஷ்மீரைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அரசியல்வாதிகள் எதற்கெடுத்தாலும் பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அவர்கள் தீவிரவாதிகளுக்கு எதிராகவோ, தீவிரவாதத்துக்கு எதிராகவோ பேசுவதில்லை.

அவ்வாறு பேசினால் தீவிரவாதிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் என்ற பயத்தால் காஷ்மீர் அரசியல்வாதிகள் இவ்வாறு பேசி வருகின்றனர்.” என்றார்.

இதுதொடர்பாக சிஆர்பிஎப் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சர்மா கூறும்போது, “தொழுகைக்குப் பிறகு முஸ்லிம் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வாகனத்தை மறித்து சிஆர்பிஎப் வீரரை வெளியே இழுத்துப் போட முயன்றனர். மேலும் வாகனத்தின் மீதேறி கற்களால் தாக்கினர். அந்த வாகனம் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக வரவில்லை. வேறு பணிக்காக அந்த வாகனம் சென்றுகொண்டிருந்தது” என்றார்.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜூன் 7, 8-ம் தேதிகளில் ஸ்ரீநகரில் நிலைமை குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x