

பாஜக ஆட்சயில் இல்லாத மாநிலங்களில், அந்த மாநில முதல்வர்கள் அவமதிக்கப்படுவதற்கு, பிரதமர் மோடி எப்படி பொறுப்பாவார் என்று சிவ சேனை கேள்வி எழுப்பியுள்ளது.
ஹரியாணா மாநிலம் கைத்தலில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் அந்த மாநில காங்கிரஸ் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவும் பங்கேற்றனர்.
விழாவில் பூபிந்தர் சிங் ஹூடா பேசியபோது கூட்டத்தில் ஒரு பகுதியினர் "மோடி, மோடி" என்று கோஷமிட்டு அவரை பேசவிடாமல் தடுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த ஹூடா, பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டங்களில் இனிமேல் பங்கேற்க மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
அதே போல, மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் நடந்த அரசு விழாவிலும், பிரதமர் மோடி, அம்மாநில காங்கிரஸ் முதல்வர் பிருத்விராஜ் சவாண் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போதும், முதல்வர் பிருத்விராஜ் சவுகாண் பேசியபோது மோடியின் ஆதரவாளர்கள் கோஷமிட்டு இடையூறு செய்தனர்.
இதனால் பாஜக ஆட்சி இல்லா மாநில முதல்வர்களை, பாஜக- வினர் அவமதிப்பதாகவும் வேண்டுமென்றே முதல்வர்களை பேச விடாமல் செய்ய ஆட்களை விழாக்களுக்கு கொண்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் 11 மாநிலங்களில் நடைபெறும் அரசு விழாக்களில், மோடி பங்கேற்கும் விழாக்களை மாநில முதல்வர்கள் புறக்கணிப்பார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் இது தொடர்பாக, சிவ சேனை தனது அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் காங்கிரஸார்களின் குற்றச்சாட்டை விமர்சிக்கும் விதமாக கட்டுரை ஒன்றை இன்று வெளியிட்டது. அதில், "மாகாராஷ்டிர மற்றும் ஹரியாணா முதல்வர்களை விமர்சிப்பதற்காக, டெல்லியிலிருந்து குஜராத்திலிருந்தும் மக்களை யாரும் அழைத்துவரவில்லை.
இதற்கெல்லாம், மோடி எவ்வாறு பொறுப்பாவார்? அவர் மீது உள்ள பற்று மற்றும் பாசத்தை, அவர் செல்லும் இடங்களில் மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே, அந்த முதல்வர்கள் அவமதிக்கப்படுவது துருதஷ்டவசமானது தான். அந்த மாநிலங்களிலும் காங்கிரஸ், தனது மதிப்பை இழந்துவிட்டது என்று தான் இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டதில்லை. அவர்கள் ஆட்சியில், மோடியை அவமதிக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் காங்கிரஸ் பயன்படுத்தாமல் இருந்ததில்லை.
அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில், மாநிலம் ஒன்றின் முதல்வராக இருந்த மோடியை, காங்கிரஸார் மாற்றாந்தாய் மனதோடு நடத்தினர். மோடியை அவர்கள் அவமதிப்பு செய்வதை மன்னிக்கவே முடியாது" என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.