

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயில்மேல்சாந்தியாக (தலைமை அர்ச்சகர்) அருண் குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1-ம் தேதி மண்டல பூஜைகள் தொடங்கி நடைபெறும். இதற்கு முன்னதாக, ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைப்புரம் மஞ்சமாதா கோயிலுக்கு மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) தேர்வு செய்யப்படுவது வழக்கம். மேல்சாந்தி பணிக்கு ஏராளமானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பலகட்ட தேர்வுக்கு பிறகு அதில் இருந்து ஐயப்பன் சன்னதிக்கு 24 பேரும், மாளிகைப்புரம் சன்னதிக்கு 15 பேரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்கடந்த புதன்கிழமை திறக்கப்பட்ட நிலையில், சபரிமலைசன்னிதானத்தில் மேல்சாந்தியை தேர்வு செய்வதற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. கேரள உயர் நீதிமன்ற பார்வையாளர், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர், ஆணையர், உறுப்பினர்கள், பந்தளம் மன்னர் குடும்பத்தினர், கோயில் தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.
மேல்சாந்திகளை பந்தள மன்னர் குடும்பத்தை சேர்ந்தசிறுவன் ரிஷிகேஷ் வர்மா, சிறுமி வைஷ்ணவி ஆகியோர் குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர். அதன்படி, ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக கேரளாவின் கொல்லம் மாவட்டம் சக்திகுலங்கரா பகுதியை சேர்ந்த அருண் குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். மாளிகைப்புரம் மேல்சாந்தியாக கோழிக்கோட்டை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.
இவர்கள் இருவரும் நவம்பர் 16-ம் தேதி முறைப்படி பொறுப்பேற்பார்கள். அடுத்த ஓராண்டுக்கு சபரிமலை ஐயப்பன், மஞ்சமாதா சன்னதிகளில் நடைபெறும் மண்டல பூஜை,மகர பூஜை உள்ளிட்ட வழிபாடுகளை இவர்கள் தலைமையேற்று நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.