Published : 17 Oct 2024 07:13 PM
Last Updated : 17 Oct 2024 07:13 PM
புதுடெல்லி: அகர்தலாவில் இருந்து மும்பை செல்லும் லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ், அசாமின் திபலாங் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை பிற்பகல் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தின் செய்தித் தொடர்பாளர், "இன்று காலை அகர்தலாவில் இருந்து மும்பைக்குப் புறப்பட்ட லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ், அசாமில் உள்ள திபலாங் நிலையத்தில் பிற்பகல் 3.55 மணிக்கு தடம் புரண்டது. இந்த விபத்தில் பவர் கார், ரயில் என்ஜின் உட்பட 8 பெட்டிகள் தடம் புரண்டன. இருப்பினும், உயிரிழப்பு அல்லது பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
விபத்தை அடுத்து, லும்டிங் - பதர்பூர் ஒற்றைப் பாதைப் பிரிவில் ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. லும்டிங்கில் உள்ள ஹெல்ப்லைன் எண்கள் 03674 263120, 03674 263126” என்று தெரிவித்துள்ளார். லும்டிங் பிரிவுக்கு உட்பட்ட லும்டிங் - பர்தார்பூர் மலைப் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தை அடுத்து, மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT