Published : 30 May 2018 10:53 AM
Last Updated : 30 May 2018 10:53 AM

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு: கைது செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை

ஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் மீது ஜூன் 5-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார்.அப்போது, ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3500 கோடியை முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக அளிக்கப்பட்ட இந்த அனுமதி குறித்து சிபிஐ , அமலாக்கப்பிரிவினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ரூ.600 கோடி அளவிலான அன்னிய முதலீடுகளுக்கு மட்டுமே நிதி அமைச்சகம் நேரடியாக அனுமதி அளிக்க முடியும். அதற்கு மேலான தொகைக்கு பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவைக் குழுதான் அனுமதி அளிக்க முடியும். ஆனால், இதை மீறி அனுமதி அளிக்கப்பட்டதாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டுகின்றன.

இந்த அனுமதியைப் பெற்றுத் தருவதற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனம் மறைமுகமாக செயல்பட்டதாகவும், கட்டணமும் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் டெல்லி, சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம், சிதம்பரம் வீடுகளில் சோதனை நடத்தினர்.

ஜனவரி 13ம் தேதி டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின் போது, ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக ரகசிய அறிக்கையை அமலாக்கப்பிரிவினர் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிதம்பரத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் சிதம்பரம் மீது ஜூன் 5-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தது. மேலும் அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x