ரசிகர் கொலை வழக்கில் கைதான‌ தர்ஷன், பவித்ரா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

ரசிகர் கொலை வழக்கில் கைதான‌ தர்ஷன், பவித்ரா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

Published on

பெங்களூரு: ரசிகர் கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் (44) தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய ரேணுகா சுவாமி (33) என்ற ரசிகரை கடத்தி கொலை செய்ததாக கடந்த ஜூன் 11ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் மேலாளர் நாகராஜ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டன‌ர்.

இந்த வழக்கில் தர்ஷன்,பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக 3991 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர். அதில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாகவும், தர்ஷன் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் தர்ஷனும் பவித்ரா கவுடாவும் ஜாமீன் வழங்கக்கோரி பெங்களூரு மாநகர‌ 57வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தர்ஷன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ் ஆஜராகி, இருவரின் உடல்நிலை மற்றும் தொழிலை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு வாதாடினார். அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து தர்ஷன் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக வழக்கறிஞர் சி.வி.நாகேஷ் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in