Published : 16 Oct 2024 05:23 AM
Last Updated : 16 Oct 2024 05:23 AM

வக்பு வாரிய திருத்த மசோதா விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

புதுடெல்லி: நாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை, ரயில்வே ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக நிலங்கள் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தச் சொத்துகளை கண்காணிக்க, கடந்த 1954-ல் நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் இயற்றப் பட்டது. அதன் பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பிறகு கடந்த 1995-ம் ஆண்டுவக்பு சட்டம் விரிவுப்படுத்தப் பட்டது.

இந்நிலையில், வக்பு வாரிய நிர்வாக நடவடிக்கைகளை மேம் படுத்தவும், வக்பு வாரியம் தொடர் பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர மத்தியில் ஆளும்பாஜக அரசு முடிவு செய்தது. அதன்படி, நாடாளுமன்றத்தில் புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதற்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கூட்டுக் குழு அவ்வப்போது கூடி வக்பு சட்ட திருத்த மசோதா குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் இந்தக் குழு நேற்று மீண்டும் கூடி ஆலோசனை நடத்தியது. ஆனால், விதிமுறைகளின்படி இந்தக் கூட்டம் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பலர் புறக்கணித்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தகவுரவ் கோகாய், இம்ரான் மசூத்,சிவசேனா (உத்தவ் பிரிவு) கட்சியின்அரவிந்த் சாவந்த், திமுக.வைச் சேர்ந்த ஆ.ராசா, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மொகிபுல்லா, ஆம் ஆத்மியை சேர்ந்த சஞ்சய் சிங்ஆகியோர் கூட்டத்தைப் புறக்கணித்தனர். மேலும், சட்டவிதிமுறைகளின்படி கூட்டம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும், ஒரு மணி நேரம் கழித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் முறைப்படி நடைபெறாதது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் தெரிவிக்கவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். முன்னதாக கடந்த திங்கட்கிழமை நடந்த கூட்டத்தில் இருந்தும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x