Published : 16 Oct 2024 04:59 AM
Last Updated : 16 Oct 2024 04:59 AM
புதுடெல்லி: சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளஅமெரிக்காவிடம் இருந்து ரூ.32,000 கோடி மதிப்பில் 31 ப்ரீடேட்டர் டிரோன்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்க தயாரிப்பான எம்க்யூ-9பி ப்ரீடேட்டர் டிரான்களை தற்போது அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் மற்றும் நோட்டோ நாடுகள் சில பயன்படுத்துகின்றன. செயற்கைகோள் கட்டுப்பாட்டில் நீண்டநேரம் பறக்கும் இந்த டிரோன்கள் ஆப்கானிஸ்தான் உட்பட சில நாடுகளில் மிகதுல்லிய தாக்குதல்களை நடத்தியுள்ளன.ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ‘ஹன்ட்டர் -கில்லர்’ டிரோன்கள் ‘ஹெல்ஃபயர்’ ஏவுகணைகள் மற்றும்ஜிபியு-39பி குண்டுகளை வீசும் திறன் உடையது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதனால் கண்காணிப்பு பணிக்கு ப்ரீடேட்டர் டிரோன்களை ஈடு படுத்த இந்தியா உத்தேசித்துள்ளது. முப்படை பயன்பாட்டுக்கு 31 ப்ரீடேட்டர் டிரோன்களை, ஆயுதங்களுடன் அமெரிக்காவிடம் இருந்து வாங்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குழு கடந்த 9-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்த ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ளது.
இதில் இரு நாட்டு மூத்த அதிகாரிகள் கையெழுத்திட்டனர். 4 முதல் 6 ஆண்டுகளுக்குள் இந்த டிரோன்கள் இந்தியாவுக்கு விநியோகம் செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT