Published : 28 Jun 2018 11:37 AM
Last Updated : 28 Jun 2018 11:37 AM

மும்பையை கலக்கும் ‘ஹலோ டியர்’ ரோமியோக்கள்: வைரலாகும் போலீஸின் பதிலடி ட்வீட்

‘ஹலோ டியர்’ என்ற பெயரில் சமூகவலைதளங்களில் இளம் பெண்களுக்கு வலைவீசும் ‘ரோமியோக்களை’ வளைக்க, மும்பை போலீஸார் ட்விட்டரில் மீம்ஸ் வெளியிட்டு மிரட்டியுள்ளனர்.

மும்பையில் ட்விட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை பயன்படுத்தும் கல்லூகளில் படிக்கும், பணிபுரியும் இளம் பெண்களுக்கு ‘ஹலோ டியர்’ என்ற பெயரில் மெசேஜ்கள் வந்த வண்ணம் உள்ளன. நட்பாக இருக்க விரும்புவதாக கூறி சில இளைஞர்கள் காதல் வலை வீசுவதாகவும் கூறப்படுகிறது. சமூகவலைதளங்களில் பதிலளிக்கும் பெண்களுக்கு தொடர்ந்து காதல் ரசமான தகவல்களை அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறி்த்து ஏராளமான பெண்கள் புகார் அளித்துள்ளனர். அந்த கும்பலை கண்டுபிடிக்க மும்பை போலீஸ் தொழில்நுட்ப ஆய்வு பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் அந்த ‘ரோமியோ’க்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் அதேசமயம் நகைச்சுவை உணர்வுடன் மும்பை போலீஸார் ட்விட்டரில் மீம்ஸூடன் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதில் ‘‘அதுபோன்றவர்களை முடக்குங்கள். எங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தாருங்கள். அவர்களின் உணர்வு மற்றும் நோக்கத்தையும் நாங்கள் உரியமுறையில் ‘கவனித்து’ நடவடிக்கை எடுக்கிறோம். 100க்கு போன் செய்யுங்கள்; பெண்கள் பாதுகாப்பு’’ என பதிவிட்டுள்ளனர். மேலும் இதனுடன் சேர்த்து பல்வேறு நகைச்சுவை மீம்ஸ்களையும் பதிவிட்டுள்ளனர்.

மும்பை போலீஸின் நகைச்சுவையுடன் கூடிய கண்டிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மும்பை போலீஸின் டவீட்டை வரவேற்பு தெரிவித்து ஏராளமான இளம் பெண்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மும்பை போலீஸின்  ட்வீட்

ட்வீட் 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x