Published : 16 Aug 2014 08:21 PM
Last Updated : 16 Aug 2014 08:21 PM

மாணவர்கள் மீது பணத்தை வீசி சர்ச்சையில் சிக்கிய திரிணமூல் நிர்வாகி

சுதந்திர தின விழாவில் மாணவர்களை பாராட்டும் விதமாக ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியதன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர்.

மேற்குவங்க மாநிலம், ஷிக்காவூர் தாலுகா, ஹவேரி என்ற இடத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஹிந்தி தேசபக்தி பாடல் ஒன்றுக்கு மாணவர்கள் நடனம் ஆடினர். இந்த நடனத்தால் மிகவும் கவரப்பட்ட, பங்காவூர் நகராட்சி நிலைக்குழு தலைவர் இஸ்மாயில்சாப் தொட்டமணி மேடைக்கு விரைந்தார். நடமாடிய மாணவர்கள் மீது 10, 20 ரூபாய் நோட்டுகளை கொட்டியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி உள்ளூர் டி.வி. சேனலில் ஒளிபரப்பானதால், அருகில் உள்ளவர்கள் நிகழ்ச்சியை நேரில் காண மைதானத்தில் குவியத் தொடங்கினர். இந்நிலையில் தனது தவறை உணர்ந்த இஸ்மாயில்சாப் அங்கிருந்து வெளியேறினார்.

இஸ்மாயில்சாப் செயலால் ஆத்திரமுற்ற உள்ளூர் பாஜக தொண்டர்கள் திரிணமூல் காங்கிரஸ் அலுவலகம் முன் திரண்டு, அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டையும் மாணவர்களையும் அவர் அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் உள்ளூர் நிர்வாகிகள் கூறும்போது, “இஸ்மாயில்சாப் அப்பாவி, கல்வியறிவு இல்லாதவர். நாட்டுப்பற்று மற்றும் இசையால் மிகுந்த உற்சாகமடைந்து இவ்வாறு செய்துள்ளார். அவர் மது அருந்தியிருந்ததாக கூறுவது தவறு” என்றனர்.

இந்நிலையில் மாணவர்கள் மீது பணத்தை வீசியதாக கூறுவதை இஸ்மாயில்சாப் மறுத்துள்ளார். “நான் குழந்தைகளுக்கு பரிசு கொடுக்கும்போது, ஒன்றிரண்டு தாள்கள் தவறுதலாக கீழே விழுந்தன. மாணவர்களின் திறமையை பாராட்டி நான் பணப்பரிசு கொடுப்பது வழக்கம். இதில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x