Published : 28 Jun 2018 07:51 AM
Last Updated : 28 Jun 2018 07:51 AM

மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் திலீப்: 4 முன்னணி நடிகைகள் ராஜினாமா

மலையாள திரைப்பட நடிகர் சங்கமான ‘அம்மா’வில் (Association of Malayalam Movie Artists) நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் மலையாள முன்னணி நடிகைகள் 4 பேர், சங்கத்தை விட்டு விலகினர்.

மலையாள முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். 85 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அண்மையில் கொச்சியில் நடந்த ‘அம்மா’ பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டார்.

இதற்கு, திலீபின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியார் தலைமையில் செயல்படும் திரையுலகப் பெண்கள் கூட்டமைப்பு (டபிள்யுசிசி) எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் மலையாள முன்னணி நடிகைகளான ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் மற்றும் கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடிகை ஆகிய நால்வரும் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நேற்று விலகினர். இத்தகவல் திரையுலகப் பெண்கள் கூட்டமைப்பின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், கடத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை கூறும்போது, “கடந்த காலத்தில் எனது திரைப்பட வாய்ப்புகளை இந்த நடிகர் (திலீப்) தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது கடினமான தருணங்களை நான் கடந்து வந்திருக்கும்போது நடிகர் சங்கம் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவே தோன்றுகிறது. எனவே இனிமேலும் இதில் உறுப்பினராக நீடிப்பதில் அர்த்தமில்லை என்றே கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகை ரம்யா நம்பீசன் தனது பதிவில், “எனது சக நடிகைக்கு எதிராக மிகவும் மனிதநேயமற்ற முடிவை ‘அம்மா’ எடுத்துள்ளது. எனவே நான் விலகுகிறேன்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x