Last Updated : 29 Jun, 2018 11:19 AM

 

Published : 29 Jun 2018 11:19 AM
Last Updated : 29 Jun 2018 11:19 AM

நரசிம்ம ராவ் பிறந்த தினம்: வாழ்த்துத் தெரிவித்த மோடி, கண்டுகொள்ளாத ராகுல்

முன்னாள் பாரதப் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் 97வது பிறந்த தினத்திற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். எனினும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏனோ வாழ்த்துத் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், காங்கிரஸ் அதன் தலைவருக்கு உரிய மரியாதை செலுத்தியது. கட்சி தனது ட்விட்டர் தளத்தில் ''இந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினத்தில் அவரை நினைவுகூர்கிறோம். கடுமையான பொருளாதார சூழ்நிலையின்போது ஒரு சிறுபான்மை அரசாங்கத்திற்கு அவர் தலைமை ஏற்றிருந்தார்.

அச்சமயத்தில் நாடாளுமன்றம் மூலம் தேவையான சட்டங்களை இயற்றி பொருளாதார நெருக்கடி ஏற்பட இருந்த சூழ்நிலையை மாற்றியமைத்தவர் என்ற வகையில் அவர் இன்னமும் சாணக்கியரோடு ஒப்பிடப்படுகிறார்.'' என்று தெரிவித்துள்ளது.

ட்விட்டர் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது:

‘‘நமது முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் பிறந்த தினத்தின்போது அவரை நினைவு கூர்கிறோம். இந்திய வரலாற்றில் ஒரு மோசமான சூழ்நிலை நாட்டிற்கு ஏற்பட்டபோது, தனது மதிப்புவாய்ந்த தலைமையில் அரசை சிறப்பாக வழிநடத்தியவகையில் அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். மகத்தான ஞானத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர், ஒரு புகழ்பெற்ற அறிஞராகவும் ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்'' என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஒன்பதாவது பிரதமராக பதவி வகித்த பி.வி.நரசிம்ம ராவ் 1921 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று பிறந்த தினம் நேற்று நினைவுகூரப்பட்டது. பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்துத் தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமருக்கு, காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்தி வாழ்த்துத் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x