

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் தீப்பற்றியபடி ஓட்டுநர் இன்றி ஓடிய காரால் வாகன ஓட்டிகள் பீதியடைந்து தப்பி ஓடினர்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் ஜித்தேந்திர ஜாங்கிட். இவர் தனது காரில் அஜ்மீர் சாலையில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் இருந்து புகை வந்தது. இதனால் காரை நிறுத்தி, முன்பகுதியை திறந்து பார்த்தார். தீப்பற்றியபடி ஓட்டுநர் இன்றி பாலத்தில் இருந்து இறங்கி வந்த வாகனம்.அப்போது இன்ஜின் தீப்பற்றி எரிந்தது. இதனால் அவர் அந்த இடத்தைவிட்டு சென்றார். கார் தீ பற்றி எரிந்ததில் அதன் ஹேன்ட் பிரேக் சேதமடைந்து வண்டி பாலத்தில் இருந்து கீழ் நோக்கி உருண்டது.
தீப்பற்றிய படி ஒரு கார் பாலத்தில் இருந்து வருவதை பார்த்த வாகன ஓட்டிகள், பீதியில் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினர். இறுதியில் அந்த கார் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. அதன்பின் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி நின்றது. தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் ஜெய்ப்பூரின் அஜ்மீர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.