Last Updated : 17 Jun, 2018 02:47 PM

 

Published : 17 Jun 2018 02:47 PM
Last Updated : 17 Jun 2018 02:47 PM

துணைக்கண்டத்தில் கேஸ், மண்எண்ணெய் விலை இந்தியாவில் தான் குறைவு; பெட்ரோல், டீசல் எங்கு தெரியுமா?

துணைக்கண்டத்திலேயே இந்தியாவில்தான் சமையல் கேஸ் சிலிண்டர் விலை, மண்எண்ணெய் விலை மிகவும் குறைவு. அதேசமயம், பாகிஸ்தானில் பெட்ரோல் விலையும், இலங்கையில் டீசல் விலையும் குறைவு என்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. நாள்தோறும் சில காசுகள் உயர்வதும், குறைவதும் இருந்தாலும், மாதக்கடைசியில் பார்க்கும் எரிபொருட்கள் விலை உயர்ந்த நிலையிலேயே இருந்து வருகிறது. இது சாமானிய மக்கள் , நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டீசல் விலையில் ஏற்படும் உயர்வு அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் விலையை உயர்த்துகிறது.

இந்நிலையில், பெட்ரோல் திட்டமிடல் மற்றும் ஆய்வு அமைப்பு(பிபிஏசி) பல்வேறு நாடுகளில் எரிபொருட்களான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவில் மொத்தம் 22.43 கோடி மக்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வீட்டுப்பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 18.11 மக்கள் மானிய விலையில் அரசிடம் இருந்து பெற்று வருகின்றனர். ஏறக்குறைய நாட்டில் 80 சதவீத வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்பாடு வந்துவிட்டது.

இதில் மானியவிலை வழங்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ. 493.55க்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு கிலோ ரூ.34.76 காசுகளுக்குச் சராசரியாக விற்பனை செய்யப்படுகிறது. மானியமில்லாத சிலிண்டர் விலை ஜுன் 1-ம் தேதி நிலவரப்படி 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.671. சராசரியாக ஒரு கிலோ ரூ.47.25க்கு மக்களிடம் விற்கப்படுகிறது.

ஆனால், இதே சிலிண்டர் விலை பாகிஸ்தான், இலங்கை, நேபாளத்தில் மிக அதிகமாகும், சிலிண்டரின் எடையும் குறைவாகும்.

பாகிஸ்தானில் வீட்டு உபயோக சிலிண்டர் 11.8 கிலோ எடை ரூ.1,039.52க்கு விற்கப்படுகிறது, சராசரியாக ஒரு கிலோ ரூ.88.95 காசுகளாகும். இந்திய துணைக்கண்டத்திலேயே சமையல் சிலிண்டர் விலை பாகிஸ்தானில்தான் அதிகமாகும்.

இலங்கையில் 12.5 கிலோ சிலிண்டர் விலை ரூ.815.11க்கும், நேபாளத்தில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.867க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் சராசரியாக ஒரு கிலோ எல்பிஜி ரூ.65.22க்கும், நேபாளத்தில் ரூ.51.50 காசுகளுக்கும் விற்கப்படுகிறது. வங்கதேசத்தில் 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.643.79க்கு விற்பனையாகிறது. சராசரியாக ரூ.51.50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

மண்எண்ணெய் விலையை எடுத்துக்கொண்டால் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, நம்நாட்டில் லிட்டர் ரூ.25.03 காசுகளுக்கு மக்களுக்கு விற்கப்படுகிறது. இது பாகிஸ்தானில் ஒரு லிட்டர் மண்எண்ணெய் ரூ.46.78 காசுகளுக்கும், வங்கதேசத்தில் ஒரு லிட்டர் ரூ.52.62க்கும், இலங்கையில் ரூ.43.25 காசுகளுக்கும், நேபாளத்தில் ரூ.58.02 காசுகளுக்கும் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், பெட்ரோல், டீசல் விலையைப் பொருத்தவரை துணைக் கண்டத்தில் இந்தியாவில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.76.43 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.49.90 காசுகளுக்கும், இலங்கையில் ரூ.58.67 காசுகளுக்கும், நேபாளத்தில் ரூ.69.37 காசுகளுக்கும், வங்கதேசத்தில் ரூ.69.63 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

மும்பையில் பெட்ரோல் விலை ரூ.84.26, கொல்கத்தாவில் ரூ.79.10 காசுகள்,சென்னையில் ரூ.79.33க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டீசலைப் பொருத்தவரை டெல்லியில் ஒரு லிட்டர் ரூ.67.85காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பாகிஸ்தானில் ரூ.58.02 காசுகளுக்கும், நேபாளத்தில் ரூ.57.84 காசுகளுக்கும் மக்களுக்கு விற்கப்படுகிறது.

இலங்கையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.46.68 காசுகளுக்கும், வங்கதேசத்தில் ரூ.52.62 காசுகளுக்கும் விற்கப்படுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x