Published : 23 Jun 2018 01:21 PM
Last Updated : 23 Jun 2018 01:21 PM

மாமியாரை கொலை செய்ய விருந்தில் விஷம் கலந்த மருமகள்: 4 குழந்தைகள் பலியான பரிதாபம்

மகாராஷ்ராவில் கிரகப் பிரவேச நிகழ்ச்சியில் உணவு விஷமாகி 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், உணவில் திட்டமிட்டு விஷம் கலக்கப்பட்டது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கணவரிடம் இருந்து தன்னை பிரித்த மாமியார் மற்றும் நாத்தனாரை கொலை செய்வதற்காக இளம் கலந்த விஷமே 5 பேர் மரணத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள கோபோலி என்ற கிராமத்தில் மானே என்பவர் புதிய வீடு கட்டினார். வீட்டு கிரகப் பிரவேசம் முடிந்து விருந்து நிகழ்ச்சி நடந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் விருந்தில் கலந்து கொண்டனர். ஏராளமான உணவு வகைகள் விருந்தில் பரிமாறப்பட்டன.

சில வரிசை பந்தி முடிந்த நிலையில், சாப்பிட்ட பலருக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகஅளவு பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பலருக்கு வயிற்று வலி அதிகமானது. சிகிச்சை பலனின்றி 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விருந்தில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டு விஷம் கலக்கப்பட்ட அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கணவரிடம் இருந்து தன்னை பிரித்த மாமியார், நாத்தனார் உள்ளிட்டவர்கள் மீது கோபம் கொண்ட இளம் பெண் ஒருவர், அவர்களை கொல்வதற்காக உணவில் விஷம் கலந்துள்ளார். இந்த விஷ உணவை சாப்பிட்டு 4 குழந்தைகள் உட்பட 5 உயிரிழந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

மாமியார், நாத்தனார்

புதிய வீடு கட்டி கிரகப் பிரவேசம் நடத்திய மானேயின் நெருங்கிய உறவினர் பிரத்னயா என்ற ஜோதி என்ற இளம் பெண் விஷம் கலந்துள்ளார். இளம் வயதிலேயே அவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் வீட்டில் உள்ளவர்கள் அவரை கொடுமை படுத்தியுள்ளனர்.

அவரது உடல் நிறத்தை குறித்தது இழிவாக குறிப்பிட்டு திட்டியதுடன், வீட்டில் பாத்திரங்களை கழுவுமறு கூறி கொடுமை படுத்தியுள்ளனர். கேவலமான பெண்ணாக மற்றவர்களிடம் குறை கூறியுள்ளனர்.

கருப்பாக இருப்பதாக கூறி மாமியார் மற்றும் நாத்தனார் கிண்டல் செய்துள்ளனர். இவரது சமையல் பற்றியும் அவமானகரமாக பேசியுள்ளனர். குறிப்பாக மாமியார் மற்றும் கணவரின் சகோதரிகள் இருவர் சேர்ந்து பிரத்னயாவிடம் சண்டையிட்டுள்ளனர். அவரை தாய் வீட்டிற்கு அனுப்பி விடுமாறு நிர்பந்தித்துள்ளனர்.

இதனால் தனது தாய் மற்றும் சகோதரிகளின் பேச்சைக்கேட்டு, பிரத்னயாவை அவரது கணவர் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். கணவருடன் சேர்ந்து வாழ முடியாமல் பிரிந்து சென்ற பிரத்னயா தனது தாய் வீட்டில் வசிந்து வந்துள்ளார். கணவர் வீட்டார் மீது தீராத கோபத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நெருங்கிய உறவினரான மானே வீட்டு கிரகப் பிரவேச நிகழ்ச்சிக்கு தனது கணவர் குடும்பத்தினர் வருவதாக தகவல் கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார் பிரத்னயா.

கொலைத் திட்டம்

நெருங்கிய உறவினர் என்பதால் விருந்து பரிமாறும் இடத்திற்கு சென்று உதவுவது போல நாடகமாடியுள்ளார். விருந்தினர்களுக்கு சப்பாத்தியும், தாலும் பரிமாறப்பட்டது. தனது கணவர் குடும்பத்தினர் விருந்து சாப்பிட வரிசையில் அமர்ந்ததை உறுதி செய்து கொண்ட பிரத்னயா, அவர்களுக்கு பரிமாறுவதற்காக வாளியில் எடுத்துச் செல்லப்பட்ட தாலில் மட்டும் பூச்சி மருந்தை கலந்துள்ளார்.

அந்த வரிசையில் அமர்ந்து உணவருந்திய அனைவரும் விஷம் கலந்த தால் சாப்பிட்டுள்ளனர். இந்த வரிசையில் அமர்ந்து சாப்பிட்ட 4 குழந்தைகளும், பெரியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரத்னயாவின் கணவர் குடும்பத்தினர் உட்பட சிலருக்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனையில் நாடகம்

கணவர் குடும்பத்தை கொலை செய்வதற்காக உணவின் விஷம் கலந்ததை பிரத்னயா ஒப்புக் கொண்டதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் அன்றைய தினம் பந்தியில் அமர்ந்து உணவு சாப்பிடவில்லை. எனினும் தனக்கு விருந்து சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை மருத்துவர்கள் தெரிந்து கொண்டனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினர்கள் பலரும் நிகழ்ச்சியில் விருந்து சாப்பிடாத பிரத்னயா உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி நாடகமாடுவதை கண்டு பிடித்தனர். இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு அவர் விசாரிக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் நடந்த அனைத்தையும் அவர் கூறியுள்ளார்.

ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் விபத்து என வழக்குபதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x