ஐநா நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 600 இந்திய வீரர்களின் நிலை குறித்து மத்திய அரசு கவலை

ஐநா நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 600 இந்திய வீரர்களின் நிலை குறித்து மத்திய அரசு கவலை
Updated on
1 min read

புதுடெல்லி: ஹிஸ்புல்லாக்கள் மீது தாக்குதல் நடத்தும்போது, தெற்கு லெபனானில் நிலைகொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினர் மீது இஸ்ரேஸ் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக லெபனானில் நிறுத்தப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி படையில் அங்கம் வகிக்கும் 600 இந்திய வீர்களின் நிலை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இவர்கள் இஸ்ரேஸ் - லெபனான் எல்லையில் உள்ள 120 கி.மீ., தூரமுள்ள நீலக்கோட்டில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீல கோட்டு பகுதியில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம். ஐ.நா. வளாகத்தின் மீற முடியாத தன்மைகளை அனைவரும் மதிக்க வேண்டும். ஐநா அமைதிப் படையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஐக்கியநாடுகள் சபையின் இடைக்கால படையின் நாகோரா தலைமையகம் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்துள்ளது.

"இஸ்ரேல் ராணுவத்தின் மேர்காவா டேங்க், இன்று காலையில் லெபனானின் நகோவுராவில் உள்ள ஐக்கிய நாடுகளின் யுஎன்ஐஎஃப்ஐஎல்-ன் கண்காணிப்பு கோபுரம் மீது நடத்திய நேரடி தாக்குதலில் அமைதி குழுவின் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர். அதிருஷ்டவசமாக இந்த தாக்குதலில் காயம் அதிகமாக இல்லை என்றாலும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் - லெபனான் எல்லையில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. அந்தப் பகுதியில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருவது அங்கு நிலைநிறுத்தப்பட்டிருக்கும் படைகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இதனிடையே, யுஎன்ஐஎஃப்ஐஎல் நிலைகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஹில்புல்லாக்களின் செயல்பாடுகள் இருந்தன என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை குற்றம்சாட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in