வங்கதேசம் | காளி அம்மனுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு

வங்கதேசம் | காளி அம்மனுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு
Updated on
1 min read

டாக்கா: வங்கதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் காளி அம்மனுக்கு பிரதமர் மோடி தானமாக வழங்கி கிரீடம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் சத்கிரா நகரில் உள்ளது ஜசோரேஸ்வரி கோயில். கடந்த 2021ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் சென்றிருந்தபோது இந்த கோயிலில் உள்ள அம்மனுக்கு கிரீடம் ஒன்றை தானமாக வழங்கியிருந்தார். வெள்ளியில் செய்யப்பட்ட அந்த கீரிடத்தில் தங்கமுலாம் பூசப்பட்டிருக்கும்.

இந்த கிரீடம் தற்போது திருடுபோயுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காளி சிலையின் தலையில் கிரீடம் இல்லாமல் இருந்ததை கண்ட கோயில் பணியாளர் இதுகுறித்து நிர்வாகத்திடம் தெரிவித்ததாக வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து வங்கதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதுரகம் கவலை தெரிவித்துள்ளது. சத்கிராவின் ஈஸ்வரிபூரில் அமைந்துள்ள இக்கோயில் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இது பின்னர் 13ஆம் நூற்றாண்டில் லக்‌ஷ்மன் சென் என்பவரால் புதுப்பிக்கப்பட்டதாகவும், அதன்பின் ராஜா பிரதாபதித்யா என்பவர் 16ஆம் நூற்றாண்டில் இந்த கோயிலை மீண்டும் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in