Last Updated : 24 Jun, 2018 02:22 PM

 

Published : 24 Jun 2018 02:22 PM
Last Updated : 24 Jun 2018 02:22 PM

கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்ததில் 15 பெண்கள் பலி: 10க்கும் மேற்பட்டோர் காயம்

தெலங்கானா மாநிலம், யாதாத்ரி மாவட்டத்தில் கூலித்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

யாதாத்ரி மாவட்டம், லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை ஒரு டிராக்டரில் வேலைக்குச் சென்றனர். அப்போது, வெமலகுண்டா கிராமத்தில் உள்ள முசி கால்வாய் பாதையில் டிராக்டர் வந்தபோது, எதிரே வந்த இரு சக்கரவாகனத்துக்கு இடம் ஒதுக்கும் வகையில், டிராக்டர் டிரைவர் வண்டியை ஓரமாக ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்துகால்வாய்க்குள் விழுந்துவிபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த தொழிலாளர்களில் 14 பெண்களும், ஒரு குழந்தையும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு, போலீஸுக்கு தகவல் அளித்தனர். போலீஸார், தீயணைப்புப் படையினர் வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து துணை போலீஸ் ஆணையர் எஸ். ரமேஷ் கூறுகையில், ’’பருத்திக் காட்டில் வேலைக்குச் செல்வதற்காக டிராக்டரில் 25 பெண்கள் சென்றுள்ளனர். இன்று காலை வெமலகுண்டா கிராமத்தில் உள்ள முசி கால்வாய் பாதையில் டிராக்டர் வந்தபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே 14 பெண்கள், ஒரு குழந்தை பலியாகினார்கள். 8-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது’’ எனத் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து அறிந்து முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், எரிசக்தித்துறை அமைச்சர் ஜி.ஜகதீஸ்வர் ரெட்டி, நல்கொண்டா, யாதாத்ரி மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் பேசி, மீட்புப் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x