கர்நாடக முதல்வராக சித்தராமையா தொடர்வார்: டி.கே.சிவகுமார், சதீஷ் ஜார்கிஹோளி தகவல்

கர்நாடக முதல்வராக சித்தராமையா தொடர்வார்: டி.கே.சிவகுமார், சதீஷ் ஜார்கிஹோளி தகவல்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக முதல்வராக சித்தரா மையாவே பதவிக் காலம் முடியும் வரை தொடர்வார், அவரை மாற்றும் எண்ணம் இல்லை என துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் அமலாக்கத் துறையும் லோக் ஆயுக்தாவும் அவர் மீது நிலமுறைக்கேடு வழக்குப் பதிவுசெய்துள்ளன. இதற்கு பொறுப்பேற்று சித்தராமையா அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

அதேவேளையில் முதல்வர் பதவியை கைப்பற்ற துணை முதல்வர் டி.கே.சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, பொதுப்பணித் துறை அமைச்சர்சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர்இடையே கடும் போட்டி நிலவுகிறது. மூவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கட்சி மேலிட மும் சித்தராமையாவிடம் ஆலோ சனை நடத்தியது. இதனால்முதல்வர் சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

நெருக்கடி இல்லை: இந்நிலையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுவலுவாக உள்ளது. முதல்வர் சித்தராமையாவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அவர் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வார். நாங்கள் முதல்வர் பதவிக்காக மோதிக் கொள்ளவில்லை. சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்றும் எண்ணம் இல்லை’’ என்றார்.

பதவி காலியில்லை: பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஜோளி பேசுகையில், ‘‘முதல்வர் பதவி காலியாக இல்லாதபோது, அதற்காக நான் போட்டியிடுகிறேன் என கூறுவது சரியல்ல. முதல்வர் மாற்றம் கிடையாது என மேலிடத் தலைவர்கள் பலமுறை உறுதிபட தெரிவித்துவிட்டனர். சித்தராமையாவின் தலைமையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரை மாற்றும் சூழல் வந்தால் அதுபற்றி விவாதிக்கலாம். அது வரை அவரே முதல்வராக தொடர்வார்’’ என்றார். டி.கே.சிவகுமார், சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோரின் இந்த கருத்தால் சித்தராமையாவுக்கு நெருக்கடி குறைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in