

ஹைதராபாத்: ஹரியானா சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்ற பாஜகவுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல், மக்கள் நலனில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றையும், அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவையும் காட்டுகிறது. ஹரியானாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹாட்ரிக் வெற்றிக்கும், காஷ்மீரில் குறிப்பிடத்தக்க வெற்றிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர் மோடி, பாஜக தலைமை, கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றை (அக்.08) நடைபெற்றது. இதில் ஹரியானாவில் தனி பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. நயாப் சிங் சைனி மீண்டும் முதல்வராவார் என தெரிகிறது. அதே போல ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்க உள்ளார்.