சுயேச்சையாக போட்டியிட்ட சாவித்ரி ஜிண்டால் வெற்றி

சுயேச்சையாக போட்டியிட்ட சாவித்ரி ஜிண்டால் வெற்றி
Updated on
1 min read

சண்டிகர்: ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக மேலிடம் சீட் தர மறுத்த நிலையில் ஹிசார் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பெண் தொழிலதிபர் சாவித்ரி ஜிண்டால் அமோக வெற்றி பெற்றார்.

ரூ.3.65 லட்சம் கோடி சொத்துகளுடன் நாட்டின் முதலாவது பணக்கார பெண் தொழிலதிபராக இருப்பவர் சாவித்ரி ஜிண்டால். இவர், நீண்ட காலமாக காங்கிரஸில் இருந்தார். 2005, 2009 பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அவர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் அண்மையில் பாஜக சார்பில் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து ஹிசார் தொகுதியில் அவர் சுயேச்சையாக களமிறங்கினார். நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் சாவித்ரி ஜிண்டால் 18,941 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் கமல் குப்தா தோல்வி கண்டார். தற்போது ஹிசார் தொகுதியில் 3-வது முறையாக எம்எல்ஏவாகி இருக்கிறார் சாவித்ரி ஜிண்டால்.

இதுகுறித்து சாவித்ரி ஜிண்டால் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "என்னை வெற்றி பெற வைத்த ஹிசார் குடும்பத்தாருக்கு எனது நன்றி. 3-வது முறையாக இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளேன். தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்வேன்" என பதிவிட்டுள்ளார்.

ரூ.3.65 லட்சம் கோடி சொத்துகளுடன் நாட்டின் முதலாவது பணக்கார பெண் தொழிலதிபராக சாவித்ரி ஜிண்டால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in