Published : 09 Oct 2024 08:21 AM
Last Updated : 09 Oct 2024 08:21 AM

ஜம்முவில் ஒரு தொகுதியில் முதல்முறை வெற்றி: ஹரியானா மாநிலத்தில் ஆம் ஆத்மி படுதோல்வி

ஜம்மு காஷ்மீரின் தோடா தொகுதியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக்

புதுடெல்லி: ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் ஹரியானாவில் போட்டியிட்ட 89 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தோல்வி அடைந்தது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இடம்பெற்றுள்ளது. எனினும் ஹரியானாவில் முக்கிய கட்சியான காங்கிரஸ் ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்க முடியவில்லை.

இதனால் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் கட்சியாக இருந்தாலும் அண்டை மாநிலமான ஹரியானாவில் அக்கட்சியால் காலூன்ற முடியவில்லை. இதற்கு மாறாக ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தலில் முதல் வெற்றியை ஆம் ஆத்மி பதிவு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் (36) வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்து வந்த பாஜக வேட்பாளர் கஜய் சிங் ரானாவை சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2020-ல்நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மெஹ்ராஜ் மாலிக் வெற்றி பெற்றுஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலத்தில் முதல் வெற்றியை பெற்றுத் தந்தார். இந்நிலையில் தற்போது பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்துள்ளார்.

கேஜ்ரிவால் சொந்த மாநிலமான ஹரியானாவில் ஆம் ஆத்மி முற்றிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் அதன் வெற்றி வியப்பை அளித்துள்ளது. தோடாவில் கடந்த 2014 தேர்தலில் பாஜக வேட்பாளர் சக்தி ராஜ் வெற்றி பெற்றிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x