

ப
த்திரிகையாளர்களான நாம் இப்போது மோசக்காரர்களாகக் காட்சி தருகிறோம். பணம் கொடுத்தால் விலைபோகத் தயாராக இருக்கிறோம் என்று பெரும்பாலான மக்களை நம்பவைக்க முயற்சிகள் நடக்கின்றன.
மறைத்து வைக்கப்பட்ட கேமராவைக் கொண்டு படம் பிடித்தபடியே உரையாடல்களை நிகழ்த்தும் புலனாய்வு இதழியல்’ நடைமுறை மிகவும் தரம் தாழ்ந்திருக்கிறது. (சில பத்திரிகை அலுவலக அதிகாரிகளையும் உரிமையாளர்களையும்கோப்ரா போஸ்ட் நிருபர்கள் குழு சந்தித்து, ஒரு செய்திக்குப் பணம் தருவதாக பேரம் பேசிய ‘ஆபரேஷன் 136’ தொடர்பாக இக் கட்டுரையை சேகர் குப்தா எழுதியிருக்கிறார்.)
முதலாவதாக, இந்த காணொலிக் காட்சிகள் வெளியிடப்பட்டிருப்பதால் பத்திரிகையாளர்கள் அவமானத்தில் ஆழவோ, கூட்டாக உடன்கட்டை ஏறவோ வேண்டிய அவசியமே இல்லை. ஆசிரியர் குழுவுக்கும் பத்திரிகையின் வருவாய்ப் பிரிவுக்குமான சுவர் தகர்ந்திருந்தால், போராடி அதை மீண்டும் எழுப்பிக்கொள்வது அவசியம்.
இரண்டாவதாக, ஒரேயொரு பத்திராதிபர், சில அமைப்புகளின் விற்பனைப் பிரதிநிதிகள் தவிர, மற்ற எவரும் விலைபோகத் தயாரில்லை என்றே பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். பத்திரிகையின் தலையங்கம், செய்திகள் ஆகியவற்றில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
மூன்றாவதாக, செய்தி ஊடகங்களின் செல்வாக்கு என்பது அதன் நிதி வளம், பண பலம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது. இந்தியாவிலேயே மிகப் பெரிய செய்தி ஊடகத்தின் ஆண்டு விற்றுமுதலே ரூ.6,700 கோடி தான்! எஞ்சிய நிறுவனங்கள் 1,000 கோடி ரூபாய் என்ற அளவைக்கூடத் தாண்டியதில்லை. இவற்று டன் ரூ.4.3 லட்சம் கோடி விற்று முதல் உள்ள ரிலையன்ஸ் குழுமம், ரூ.2.9 லட்சம் கோடி விற்றுமுதல் உள்ள ஆதித்ய பிர்லா குழுமம், அல்லது ரூ.7,663 கோடி விற்றுமுதல் உள்ள டிஎல்எஃப் ஆகியவற்றுடன் பத்திரிகை நிறுவனங்களை ஒப்பிடுங்கள். பணம் சம்பாதிப்பது மட்டும்தான் பத்திரிகை நிறுவனங்களின் நோக்கம் என்றால் இந்தத் தொழில் நிறுவனங்கள் தங்களுடைய அன்றாட கைச் செலவு பணத்திலேயே பத்திரிகைகளை முழுதாக விலைக்கு வாங்கிவிட முடியும்.
நாலாவதாக, மோசடிக்கும் நிஜத்துக்கும் உள்ள சிறு வேறுபாடுகளைச் சிலரால் புரிந்துகொள்ள முடியாது. மிகப் பெரிய பதவியில் இருப்பவர்கள் இப்படி ஏமாந்தால், பத்திரிகையாளர்கள் எல்லோருமே விலை போகக்கூடியவர்கள் என்று முடிவு கட்டிவிடுகிறார்கள். நம்மில் சிலர் அதிகாரத்தில் உள்ளவர்களுடைய மிரட்டல், நெருக்குதலுக்கு ஆளாகிறோம், ஆனால் பணிவதில்லை. இந்தப் புலனாய்வு இதழியல் தந்த தகவல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும். .
ஐந்தாவதாக, ஒரு சித்தாந்தத்துக்கு அல்லது அரசியல் கட்சிக்கு ஆதரவு என்ற நிலை, பத்திரிகையின் உரிமையாளர்கள் அரசியல்வாதிகளாகும்போது நடைபெறும், அது வெளிப்படையாகத் தெரிந்துவிடும். பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் நடுநிலையைத்தான் வகிக்கின்றன. சிலர் பணத்தாசையுடன் இருப்பதால் பத்திரிகைத் துறையே உடைந்து நொறுங்கிவிட்டதாகக் கற்பனை செய்துகொள்வது சரியல்ல.
ஆறாவதாக, வெகுஜன ஊடகம் நொறுங்கிவிட்டது, சமூக ஊடகம்தான் இனி ஒரே தீர்வு என்பது ஆபத்தான-கேலிக்குரிய கருத்தாகும். நரேந்திர மோடி அரசுக்கு தரும சங்கடத்தை விளைவித்த செய்திகளில் பெரும்பாலானவை செய்தி ஊடகங்களில் வெளியானவைதான். மோடி என்று பெயர் எழுதப்பட்ட கோட்டை பிரதமர் அணிந்திருந்தார், அதன் மதிப்பு இவ்வளவு ரூபாய் என்று செய்தி வெளியிட்டதே ஒரு பத்திரிகை நிறுவனத்தின் மூலம்தான். சமூக ஊடகங்கள் வழியாக வந்த செய்திகளிலோ 99% போலியானவை.
ஏழாவதாக, விளம்பர வருவாயை நம்பி நடந்த செய்தி ஊடகங்கள் இப்போது அறக்கட்டளைகளையோ அல்லது வாசகர்களையோ நம்பித்தான் இருக்கிறது என்பதும் ஏற்க முடியாத வாதமாகும். பத்திரிகை நடத்த பணத்தைத் திரட்ட புது வழிகளை ஊடகங்கள் கண்டுபிடிப்பது நல்லதுதான்.
எட்டாவதாக, ஊடகங்களை அம்பலப்படுத்தியதற்குப் பிறகு அரசியல்வாதிகள் உற்சாகமாக இருக்கின்றனர். ‘செய்தி ஊடகங்கள்தான் இப்போது ஜனநாயகத்துக்குப் பெரிய ஆபத்தாகிவிட்டன’ என்று பிரதாப் பானு மேத்தா தெரிவித்த கருத்தை, சமாஜ்வாதி கட்சியின் கண்ஷியாம் திவாரி ட்விட்டரில் அப்படியே எதிரொலித்திருக்கிறார். பாஜக-ஆர்எஸ்எஸ்ஸும் இதை வரவேற்று கைதட்டியிருப்பார்கள். காங்கிரஸ்? பத்திரிகையாளர்களைக் கேலி செய்து ராகுல் காந்தி வெளியிட்ட காணொலியைக் காணத் தயாராகுங்கள். “ஏன் அச்சப்படுகிறீர்கள். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து உங்களுக்கு சுதந்திரத்தை மீட்டுத்தரும்வரை காத்திருங்கள்” என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
ஒன்பதாவதாக, இப்படி கற்பனையாக எதையாவது செய்கிறோம் என்று கூறி, அதற்கு பேரம் பேசி அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து பதில் பெற்று அதை மக்களிடையே அம்பலப்படுத்துவதற்குப் பெயர்தான் புலனாய்வு இதழியலா? விக்கிலீக்ஸ் ஆகட்டும் கேம்பிரிட்ஜின் அனாலிட்டிகாவாகட்டும் ஏற்கெனவே நடந்த சட்டவிரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தின. கிரிக்கெட் சூதாட்டத்தில் தரகருடன் பேசி ரகசிய கேமரா மூலம் அந்த பேரம் அம்பலப்படுத்தப்பட்டது. இப்படி நடந்த பல சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் ரகசியமாகக் கேமராவை வைத்துக் கொண்டு பேரம் பேசியவர்கள்தான் ஆசைகாட்டி சிக்க வைக்கப் பார்க்கின்றனர் என்ற வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி வழக்குக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்திய இதழியல் செத்துவிட்டது என்று இரங்கற்பா எழுத விரும்பும் பிரதாப் பானு மேத்தாவுக்குச் சொல்கிறேன், அதற்கான காலம் வந்துவிடவில்லை. பத்திரிகையாளர்கள் செத்துவிட்டனர் என்று உங்களிடம் யாராவது கூறினால், நிச்சயம் அது போலிச் செய்திதான். நாங்கள் இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தாக மாறிவிடவில்லை. நீங்கள்தான் ‘தவறான சேனல்களை’ பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்!
சேகர் குப்தா,
‘தி பிரின்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்
தமிழில்: ஜூரி.