Published : 09 Jun 2018 10:20 AM
Last Updated : 09 Jun 2018 10:20 AM

2015 முதல் 2017 வரை உலகவங்கியிடமிருந்து இந்தியா கடன் வாங்கவில்லை என்ற சமூகவலைத்தள செய்தி உண்மையா?

இந்த 70 ஆண்டுகால இந்திய விடுதலை வரலாற்றில் 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில்தான் உலகவங்கியிடமிருந்து இந்தியா கடன் வாங்கவில்லை என்ற செய்தி(?) ஒன்று இம்மாதம் ஜூன் 1ம் தேதி சக்ரிகா4இந்தியா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் ஹேண்டில் மூலம் பரப்பப் பட்டது, ஆனால் இது உண்மையல்ல என்று ஆல்ட் நியூஸ் என்ற செய்திகளின் உண்மை நிலவரம் அறியும் வலைத்தளம் ஆராய்ந்து அம்பலப்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாக விவரங்களைத் திருத்தியும் வெட்டியும் ஒட்டியும் பல இடங்களிலிருந்து பீறாய்ந்தும் உண்மையான செய்திகள் போல் வெளியிட்டு மக்களை திசைத் திருப்பி வருகின்றன. உதாரணமாக கர்நாடகா தேர்தல் சமயத்தில் மொத்தம் 13-14 போலிச்செய்திகள் வலம் வந்ததாக அம்பலப்படுத்தியது ஆல்ட் நியூஸ் வலைத்தளம். பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும இதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்

இந்நிலையில் உலகவங்கியிடமிருந்து 2015-17-ல் இந்தியா கடனே வாங்கவில்லை என்ற ‘செய்தி’ பற்றி  ஆல்ட் நியூஸில் கூறப்பட்டுள்ளதாவது:

சக்ரிகா4இந்தியா என்ற ட்விட்டர் ஹேண்டிலின் பின் தொடர்வோர் பட்டியலில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அலுவலகமும் உள்ளது. இந்த ட்வீட்டுக்கான லைக்குகள் 1200க்கும் மேல். மறு ட்வீட்கள் 450 முறைகள்.

இதே ட்விட்டர் பக்க பதிவு ராஜ்நீத் என்பவரது முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டு இதற்கு 12,000 லைக்குகள் விழுந்துள்ளன. மேலும் 25,000 பேர் இதனை பகிர்ந்துள்ளனர். வலதுசாரி முகநூல்வாசிகள் இதனை தொடர்ந்து பகிர்ந்தபடியே வந்துள்ளனர்.

இதே தகவலை சுதீந்தர் சப்ரா என்ற இன்னொரு முகநூல்வாசி மோடிஃபிர்சே என்ற ஹேஷ்டேக்குடன் தன் டைம்லைனில் நிலைத்தகவலிட இதற்கு ஆயிரத்துக்கும் மேலான லைக்குகள், பெரிய அளவில் 76,000 பகிர்வுகள் நிகழ்ந்துள்ளன.

ஆகவே 2015 முதல் 2017 வரை உலகவங்கியில் மோடியின் ஆட்சியில் கடன் வாங்கவில்லை என்ற செய்தி பரப்பப்பட்டு உண்மை என்று நம்பவைக்கப்பட்டது.

இது உண்மையா? என்று ஆல்ட் நியூஸ் ஆராய்ந்த போது உலகவங்கியின் தரவுகளைப் பெற்றுப் பார்த்தபோது அதில் 96,560 அமெரிக்க டாலர்களை ஒரு 50 திட்டங்களுக்காக இதே 3 ஆண்டு காலக்கட்டத்தில் கடனாக உலக வங்கி வழங்கியுள்ளது தெரியவந்தது.

மிகப்பெரிய உண்மை என்னவெனில் பிரதமர் மோடியின் கனவுத்திட்டமான ‘ஸ்வச் பாரத்’ திட்டத்துக்கு 2015-லேயே உலக வங்கி 1.5 பில்லியன் டாலர்கள் கடன் அனுமதித்துள்ளது. ஆனால் இது இன்னும் கைக்கு வரவில்லை காரணம் ஸ்வச் பாரத் சர்வே முடிவுகளை அளிக்க வேண்டிய இறுதிக்கெடுவை இந்தியா பூர்த்தி செய்யத் தவறியது. ஆனாலும் இன்னும் பயன்படுத்தாத இந்தக் கடனுக்காக இந்தியா 0.5% ‘பொறுப்புக் கட்டணம்’ (Commitment fee)செலுத்தி வருகிறது. இது ரூ.12.75 கோடியாகும்.

மேலும் உலகவங்கி அமைப்புகளான ஐபிஆர்டி, பன்னாட்டு வளர்ச்சிக் கூட்டமைப்பு என்ற ஐடிஏ ஆகியவற்றிடமிருந்து இந்தியா 2015 முதல் 2017 வரை நிறைய கடன்களை பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்காக வாங்கியுள்ளது.

மேலும் 2016ம் ஆண்டு உலகவங்கி வெளியிட்ட அறிக்கையின்படி சுதந்திரத்துக்குப் பிறகு உலகவங்கியிடமிருந்து பல்வேறு திட்டங்களுக்காக அதிக கடன் பெற்றது இந்தியா என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு வளரும் நாடாக உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் வளரும் நாடுகளுக்கு உள்ள நிலையில் 2015 முதல் 2017 வரை உலக வங்கியிடமிருந்து கடனே வாங்கவில்லை என்று ஒரு செய்திப் பரப்பப்பட்டது.

இவ்வாறு ஆல்ட் நியூஸ் வலைத்தள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x