Published : 29 Jun 2018 04:36 PM
Last Updated : 29 Jun 2018 04:36 PM

பாஜக ஒரு புலி; எதிராக காக்கைகள், குரங்குகள், நரிகள், கழுதைகள்: மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே சர்ச்சைப் பேச்சு

மத்திய அமைச்சரும், ஹிந்துத்துவத் தீவிர பற்றாளருமான ஆனந்த்குமார் ஹெக்டே எதிர்க்கட்சியினர் மீது கடும் தாக்குதல் தொடுப்பதில் பெயர் பெற்றவர்.

இம்முறை எதிர்க்கட்சியினரை காக்கைகள், குரங்குக்ள், நரிகள், கழுதைகள் என்று வர்ணித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2019 தேர்தலில் பாஜக எனும் புலிக்கு எதிராக இவர்கள் ஒன்று சேர்கின்றனரா என்று கேலி பேசியுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள கர்வாரில் பேசிய ஆனந்த்குமார் ஹெக்டே, “நாம் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறோம் இதற்குக் காரணம் காங்கிரஸ் ஆட்சி. நாம் 70 ஆண்டுகள் ஆண்டிருந்தால் வெள்ளி நாற்காலிகளில் அமர்ந்திருப்போம்.” என்று பேசினார்.

எதிர்க்கட்சியினரை விலங்குகளுடன் ஒப்பிடுவதில் ஆனந்த்குமார் ஹெக்டே முதலானவர் அல்ல, அமித் ஷா மும்பை பொதுக்கூட்டம் ஒன்றில், “வெள்ளக்காலங்களில் எலிகள், நாய்கள், பூனைகள் மிதக்கும் கட்டைகளில் ஏறி பாதுகாப்பிடம் சேரும், ஆனால் மோடி வெள்ளத்தில் இவர்கள் பாதுகாப்பு எய்த முடியாது, மோடி வெள்ளம் இவர்களை அடித்துச் செல்லும்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பரில் இதே ஹெக்டே பேசிய போது, “மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் தங்களின் தாய் தந்தையரையே தெரியாதவர்கள். அடையாளமற்றவர்கள். அவர்களின் பெற்றோர் யார் என்றே அவர்களுக்குத் தெரியாது, ஆனால் அவர்கள் புத்திஜீவிகள்” என்றார், இது இந்திய அரசமைப்புச் சட்டம் புனிதமாகக் கருதும் மதச்சார்பின்மையை இழிவு படுத்துகிறது என்று காங்கிரஸ் உடனடியாகச் சாடியது.

பிறகு தலித் போராட்டங்கள் குறித்து இதே ஹெக்டே, “நாங்கள் எங்கள் திட்டப்படி செயல்படுவோம், குரைக்கும் தெருநாய்கள் பற்றி கவலையில்லை” என்று கூறியது பெரிய சர்ச்சைக்குள்ளாகி, தலித் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தன் ‘விலங்கு’ விரோதத்தை மீண்டும் ஒருமுறை காட்டிய ஆனந்தகுமார் ஹெக்டே, எதிர்க்கட்சியினரை காக்கை, நரி, குரங்கு என்று வர்ணித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x