

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவிக்காதது ஏன் என்று நாடாளுமன்றத்தில் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் சுதிப் பந்த்யோபாத்யாய் கேள்வி எழுப்பினார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அனைத்து மதப் பண்டிகைகளுக்கும் பிரதமர்கள் வாழ்த்து தெரிவிப்பது மரபு, வாஜ்பாய் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏன் இப்போது அந்த மரபு கைவிடப்பட்டுள்ளது என்று பெஹ்ராம்பூர் எம்.பி. ஆதிர் ராஜன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், தனிநபர் தொடர்பான கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை என்று கூறியுள்ளார்.
திரினமூல் எம்.பி. சுதிப் பந்த்யோபாத்யாய் கேள்வி நேரத்தில் பேசும்போது, "ஒரு புதிய அரசு ஆட்சியில் பொறுப்பேற்றுள்ளது, மதரீதியான பிரச்சனைகளுக்கு இந்த அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா? இல்லையெனில் நாட்டின் மதச்சார்பின்மை அச்சுறுத்தலுக்குள்ளாகிவிடாதா? அவரது சொந்த மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மோடி பிற மதப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துக்கள் கூறுவது அவசியமில்லையா?” என்றார்.
பசுபதிநாத் கோயிலுக்குச் சென்று பிரதமர் 2400கிலோ நெய்யுடன் வழிபாடு செய்கிறார். நாங்கள் அதை வரவேற்கிறோம், ஆனால் ஈத் பண்டிகைக்கும் நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்திருக்க வேண்டும். இவையெல்லாம் அனைவருக்கும் பொதுவான உணர்வுகள். விஜயதசமியன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் ஈத் முபாரக் வாழ்த்துக்களுக்கும் இருக்கிறது. என்றார் அவர்.
இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகார அமைச்சர் வெங்கைய நாயுடு, "சர்வமத தர்மத்தையும் இந்த அரசு ஆதரிக்கிறது, பசுபதிநாத் கோயிலுக்கு பிரதமர் சென்றார் ஆனால் அதே நேரத்தில் முஸ்லிம் மக்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார், அது பரவலாக பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது." என்றார்.