

அழிந்து வரும் உயிரினமான ‘ஸ்பெக்டக்கிள்டு’ குரங்கு (Spectacled Monkey) உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் வேட்டையாடி கடத்தப்படுவதாக உலக அளவில் வனக்குற்றங்களைக் கண்காணிக்கும் டிராஃபிக் (TRAFFIC) அமைப்பு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய வனப் பாதுகாப்பு சட்டங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் அந்த அமைப்புடன் கைகோத்துள்ளது இந்திய வனத்துறை.
மேற்கு வங்கம், மற்றும் திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு வனப் பொருட்கள் அதிக அளவு கடத்தப்படுவதை டிராஃபிக் அமைப்பு கண்டறிந்தது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கண்ட மாநிலங்கள் அனைத்தும் இந்திய எல்லைக்கோடட்ல் அமைந்துள்ளன. தவிர, நாட்டின் பிற பகுதிகளைவிட இங்கு காடுகளும் வன உயிரினங்களும் அதிகம் இருக்கின்றன. இது வனக் கடத்தல் கும்பல்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இங்கிருந்து திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநில காடுகளில் மட்டுமே வசிக்கும் ஓரிட வாழ்வியான ‘ஸ்பெக்டக்கிள்டு’ குரங்கு, சிறுத்தை, எறும்புத் தின்னி, ஆசிய கருப்புக் கரடி ஆகியவை அதிக அளவில் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இதற்கு இந்திய வனச்சட்டங்கள் வலுவில்லாமல் இருப்பதே முக்கியக் காரணம்” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசுக்கு டிராஃபிக் அமைப்பு தகவல் தெரிவித்ததை அடுத்து இந்திய வனச்சட்டங்களை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் கருத்தரங்கு திரிபுராவில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 55 நீதிபதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகூர் பேசியபோது, “நாட்டில் நடக்கும் சட்ட விரோத வனப் பொருட்கள் கடத்தல் மற்றும் வனக்குற்றங்களை தடுக்க நீதித்துறையின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. தற்போதுள்ள சட்டங்களை மேலும் வலுப்படுத்துவது, உலகளாவிய அளவில் சட்டங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம்” என்றார்.
வடகிழக்கு மாநிலங்களின் சட்டங் களை வலுப்படுத்துவது தொடர் பான பரிசீலனைகளை விரைவில் அறிவிப்பதாக டிராஃபிக் தெரிவித் துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் புக்ஷா புலிகள் காப்பகத்தில் நடந்த இதேபோன்ற கூட்டத்தை டிராஃபிக் அமைப்பு, இயற்கை பாதுகாப்புக்கான உலகளாவிய இந்திய நிதியம் (WWF-India) ஆகியவை இணைந்து நடத்தின. இந்தக் கூட்டத்தில் வனக்குற்றங்களில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும் வனக் குற்றங்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தடயவியல் தொழில்நுட்பம் மற்றும் வனப் பொருட்கள் கடத்தல் தடுப்புக்கு உதவும் நவீன மெட்டல் டிடெக்டர்களை பயன்படுத்துவது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வழிகாட்டுதல் அடிப்படையில் இந்தியாவுக்காக நடத்தப்பட்ட முதல் நிகழ்ச்சி இது என்று டிராஃபிக் அமைப்பு அறிவித்துள்ளது.