Last Updated : 31 May, 2018 12:38 PM

 

Published : 31 May 2018 12:38 PM
Last Updated : 31 May 2018 12:38 PM

பீர் குடிப்பதற்காக கொலைசெய்து செல்போனை கொள்ளையடித்த இளைஞர் கைது

பீர் வாங்குவதற்காக அச்சகத்தில் கிராபிக் டிசைனராக வேலையும் ஒருவரை கொலை செய்து செல்போனை கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது. இறந்தவரின் செல்போன் ரூ.2,100க்கு விற்று பீர் வாங்கி தனது தாகத்தை தணித்துக்கொண்ட இளைஞர் சந்தீப் (22) என்பரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கடந்த மே 26 அன்று ஓல்கா பேஸ் 2 பகுதியில் டொமஸ்டிக் கண்டெய்னர் டிப்போவில் புதுடெல்லியின் சகர்பூரில் வசிக்கும் அர்விந்த் சௌகான் 30, என்பவரின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் 16 கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன.

இதுகுறித்து காவல் துணை ஆணையர் சின்மோய் பிஸ்வால் தெரிவித்த விவரம்:

இறந்த அர்விந்த் சவுகானின் சட்டைப் பையிலிருந்து வங்கியில் பணம் செலுத்தியதற்கான ரசீது ஒன்று போலீஸாருக்கு கிடைத்தது. அது தவிர, கையால் எழுதப்பட்ட ஒரு மின்னஞ்சல் முகவரியும் கிடைத்தது. பின்னர் பேஸ்புக் மற்றும் வங்கிக் கணக்குகள் மூலம் இறந்தவர் அர்விந்த் சவுகான் என்று கண்டறியப்பட்டது. அவர் ஒரு அச்சகத்தில் கிராபிக் டிசைனராக பணியாற்றிவந்தது தெரிந்தது.

பின்னர், போலீஸார் சுர்ஜீத் என்பவரை விசாரித்தனர். அவர் சவுகானின் செல்போனை பயன்படுத்திக்கொண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது, தான் சந்தீப் என்பவரிடமிருந்து செல்போனை விலைகொடுத்து வாங்கியதாகக் கூறினார். பின்னர் சந்தீப் எங்கிருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

ஒல்கா பேஸ்-2 குடிசைப் பகுதியில் சந்தீப்பைப் பிடித்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தான் செல்போன் கொள்ளையடிப்பதற்காக அர்விந்த் என்பவரைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். சந்தீப் தான் அப்போது மிகவும் குடித்திருந்ததாகக் கூறினார்.

''சம்பவம் நடைபெற்ற இரவு ஒரு பீர் வாங்கி அருந்த ஏங்கினேன். ஆனால் அப்போது பாக்கெட்டில் ஒரு பைசா இல்லாதநிலையே இருந்தது. எப்படியும் பீர் சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற ஆசை ஆட்டிப்படைக்க அங்கிருந்து அருகில் உள்ள இறைச்சிக் கடைக்கு வந்தேன். அந்தக் கடையில் கசாப்புக்கடைக்காரரின் கத்தியைத் தான் திருடிக்கொண்டு கண்டெய்னர் டிப்போ வந்தேன்.

அங்கிருந்த செல்போனை கொள்ளையடிக்க முயன்றேன். சவுகான் என்னைக் கீழே தள்ளினார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுதது அவரை 14 முறை கத்தியால் குத்திவிட்டு அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றேன்'' இவ்வாறு விசாரணையின்போது சந்தீப் கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட சந்தீப், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெயிண்ட்டர். ஓல்கா பகுதியில் தன் சகோதரரோடு வசித்து வருகிறார்.

இவ்வாறு போலீஸ் காவல் துணை ஆணையர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x