Published : 05 Oct 2024 05:16 AM
Last Updated : 05 Oct 2024 05:16 AM

டைம் மெஷின் மூலம் இளமை தோற்றத்தை பெறலாம்: ஆசை காட்டி ரூ.35 கோடியை சுருட்டிய உ.பி. தம்பதிக்கு வலை

கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் டைம்மெஷினில் சிகிச்சை எடுப்பதன் மூலம் இளமை தோற்றத்தை பெறலாம் என்று கூறி பொதுமக்களிடமிருந்து ரூ.35 கோடியை சுருட்டிய தம்பதியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர் (தெற்கு) அங்கிதா சர்மா கூறியதாவது: ராஜீவ் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி தம்பதியர் கான்பூருக்கு அருகே உள்ள கித்வாய் நகரில் புதிதாக தெரபி மையத்தை தொடங்கி உள்ளனர்.

இஸ்ரேல் இயந்திரம்: அங்கு வரும் வயதான வாடிக்கையாளர்களிடம் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டைம் மெஷின் மூலம் சிகிச்சைஎடுத்துக்கொண்டால் வெகுசீக்கிரமாகவே இளமையான தோற்றத்தை பெற்று விடலாம் என்றுகூறி அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் மூளைச் சலவை செய்துள்ளனர். டைம் மெஷினில் ஆக்சிஜன் தெரபி எடுத்துக் கொண்டல் 25 வயது இளமையான தோற்றத்தை பெற்றுவிடலாம் என அந்த தம்பதி அளித்த உறுதிமொழியை நம்பி பலர் சிகிச்சைக்கான கட்டணமாக ரூ.90,000-த்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் செலுத்தியுள்ளனர். தெரிந்தவர்களை இந்த சிகிச்சைக்கு அழைத்து வரும்பட்சத்தில் கட்டணத்தில் சிறப்பு சலுகை அளிக்கப்படும் என்றும் அந்த தம்பதிஆசை வார்த்தை கூறியுள்ளது.

இதனை நம்பிய பலர் ஆக்சிஜன் சிகிச்சை எடுத்தும் இளமை திரும்பாததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீஸில் புகார் அளித்தனர். இதுவரை பலரிடம் சிகிச்சை அளிப்பதாக கூறி ரூ.35 கோடி வரை மோசடி செய்ததாக புகார்அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அந்த தம்பதி டைம் மெஷின் ஆக்சிஜன் தெரபி சிகிச்சை என கூறி அவர்கள் தொடர் மோசடியில் ஈடுபடவிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ராஜீவ்-ராஷ்மி தம்பதியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லாத வகையில் விமான நிலைய அதிகாரிகள் உஷாராக இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கிதா சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x