Published : 06 Jun 2018 12:25 PM
Last Updated : 06 Jun 2018 12:25 PM

‘காலா’வுக்கு தடையில்லை; திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது- உச்ச நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படம் நாளை (ஜூன் 7) வெளியாக உள்ள‌து. இந்நிலையில் ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கினர். கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீண் ஷெட்டி உள்ளிட்டோர் ரஜினியை கண்டித்து பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கர்நாடகாவில் காலா திரைப்படத்தை திரையிடுவதற்கு தடையில்லை, கர்நாடக அரசு திரையிடப்படும் திரையரங்குகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் காலா திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்கள் தன்னுடையது என்றும், தனது அனுமதியின்றி காலா திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே கோயல் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவில் கூறியதாவது:

‘‘காலா படத்தின் கதை அம்சம் மற்றும் பாடல்கள் தன்னுடையது என்பதால், அந்த படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார். புகாருக்க அடிப்படை ஆதாரம் இல்லததால் இதனை ஏற்க இயலாது. அந்தப் படம் வெளியாவதை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தக்க ஆதாரம் இல்லாமல் அதற்கு தடை விதக்க முடியாது’’ எனக் கூறினர். மேலும், மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், காலா திரைப்படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்தனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x