Published : 24 Jun 2018 08:53 AM
Last Updated : 24 Jun 2018 08:53 AM

ஆண்களை போல் பெண்கள் மறுமணம் செய்ய கூடாதா?: வெங்கய்ய நாயுடு கேள்வி

ஆண்கள் மறுமணம் செய்யும்போது பெண்கள் செய்யக் கூடாதா என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேள்வியெழுப்பினார்.

டெல்லி விக்ஞான் பவனில் நேற்று லூம்பா பவுண்டேஷன் சார்பில் சர்வதேச விதவைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: இன்று நாம் சர்வதேச விதவைகள் தினத்தைக் கடைப்பிடித்து வருகிறோம். மக்களுக்கு விதவைகள் மீதான மனநிலை மாறவேண்டும்.

சமுதாயத்தில் மனைவியை இழக்கும் ஆண் மறுமணம் செய்து கொள்கிறான். அப்படி ஆண் மறுமணம் செய்யும்போது பெண்கள் ஏன் செய்யக்கூடாது. விதவைகள் மீது சமுதாயம் வைத்துள்ள பார்வைகள் மாறவில்லை. அது மாறவேண்டும். மாறுவதற்கான அவசியத்தை நாம் உருவாக்கவேண்டும்.

கணவர்களை இழக்கும் பெண்கள், மனைவிகளை இழக்கும் ஆண்கள் இரண்டுமே சோகம்தான். ஆனால் இந்த விஷயத்தில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசியதாவது: விதவைகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. ஆனால் இது பெரிய அளவில் இயக்கமாக உருவானால்தான் அது வெற்றியடையும். மக்களின் அணுகுமுறையில் மாற்றம் இல்லாவிட்டால், நம்மால் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

உலக அளவில் விதவைகள் நலனுக்காக 1997-ல் லூம்பா பவுண்டேஷன் தொடங்கப்பட்டது. ராஜ் லூம்பா இதை நிறுவினார். விழாவில் ராஜ் லூம்பா பேசும்போது, ‘‘இந்தியாவில் 4.6 கோடி விதவைகள் வசிக்கின்றனர். உலக அளவில் அதிக அளவில் விதவைகள் இருப்பது இந்தியாவில்தான். தேசிய மகளிர் ஆணையம் போலவே விதவைகளுக்கான ஆணையத்தையும் மத்திய அரசு உருவாக்கவேண்டும். சிறுபான்மையினர் பிரிவின் கீழ் அவர்களுக்கு உதவி வழங்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x