திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு மாற்றம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு மாற்றம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஆந்திரப் பிரதேச அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்தபோது, விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் அடங்கிய கலப்பட நெய்யை திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு இன்று (அக்.4) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரப் பிரதேச அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுவை, மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. புதிய சிறப்பு விசாரணைக் குழு, 2 சிபிஐ அதிகாரிகள், 2 ஆந்திரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள், 1 இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய பிரதிநிதி ஆகியோரைக் கொண்டதாக இருக்கும் என அறிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விசாரணைக் குழுவை சிபிஐ இயக்குநர் கண்காணிப்பார் என்றும் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக் குழு உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அப்போது, நீதிமன்றத்தை ‘அரசியலுக்கான களமாக’ பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இது ஒரு அரசியல் நாடகமாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்தனர்.

இன்றைய வழக்கு விசாரணையில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் உண்மை இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். உணவு பாதுகாப்பும் இதில் அடங்கி உள்ளது. சிறப்பு விசாரணைக் குழு மாற்றி அமைத்ததில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் திறமையானவர்கள்” என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in