டெல்லியில் ரூ.5,600 கோடி போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸுக்கு தொடர்பு: பாஜக எம்.பி. சுதன்ஷு திரிவேதி குற்றச்சாட்டு

சுதன்ஷு திரிவேதி
சுதன்ஷு திரிவேதி
Updated on
1 min read

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மகிபல்பூர் பகுதியில் போலீஸார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ. 5 ஆயிரத்து 600 கோடி ஆகும்.

இந்த சம்பவம் தொடர்பாக துஷார் கோயல், ஹிமசு குமார்,அவுரங்கசீப் சித்திக், பாரத் குமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் கைதானவர்களில் ஒருவரான துஷார் கோயல், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் பயன்படுத்தப்பட்டார் என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுதன்ஷு திரிவேதி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால் மற்றும் தீபந்தர் சிங் ஹூடா ஆகியோருடன் துஷார் கோயலுக்கு தொடர்பிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இருவருடன் குற்றவாளி துஷார் கோயல் எடுத்த புகைப்படங்கள் கிடைத்திருப்பதாகவும், காங்கிரஸ் தலைவர் ஹூடாவின் அலைபேசி எண் துஷார்கோயலிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, டெல்லி இளைஞர் காங்கிரஸ் ஆர்டிஐ பிரிவின் தலைவர் பதவி குற்றவாளி துஷார் கோயலுக்கு அளிக்கப்பட்டதற்கான நியமன ஆணைதன்னிடம் சிக்கி உள்ளதாகக் கூறினார். அந்த நியமன கடிதத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியின் பெயர்கள் அச்சடிக்கப்பட்டிருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in