ராணுவ வீரருக்கு 56 ஆண்டுக்குப் பிறகு இறுதிச் சடங்கு
கோபேஷ்வர்: ராணுவத்தின் மருத்துவப் படைப்பிரிவு வீரர் நாராயண் சிங் பிஷ்ட்.கடந்த 1968-ம் ஆண்டு சண்டிகரிலிருந்து லே நகருக்கு சென்ற இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன்-12 விமானம் இமாச்சல பிரதேசத்தின் ரோக்டங் என்ற இடத்தில் பிப்ரவரி 7-ம் தேதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த நாராயணசிங் உட்பட 4 பேரின் உடல்களை எங்கு தேடியும் அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையி்ல், 56 ஆண்டுகளுக்குப் பிறகு அடர்ந்த பனிப் பகுதியிலிருந்து நாராயண் சிங் உடல் அண்மையில் மீட்கப்பட்டது. இதையடுத்து, உத்தரகாண்டில் சமோலி மாவட்டம் தரளி பகுதியில் உள்ள கோல்புரி கிராமத்தில் நாராயண் சிங்கின் உடலுக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டு நேற்று இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இதில், பூபால் ராம் தம்தா எம்எல்ஏ, தரளி சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அர்பர் அகமது, ராணுவ அதிகாரிகள், உள்ளூர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நாராயண் சிங்கின் மனைவி பசந்த் தேவி கடந்த 2011-ம் ஆண்டே காலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
