அமலாக்கத்துறை வழக்கால் சித்தராமையா மனைவியிடம் இருந்து நிலத்தை திரும்ப பெற்றது கர்நாடக அரசு

அமலாக்கத்துறை வழக்கால் சித்தராமையா மனைவியிடம் இருந்து நிலத்தை திரும்ப பெற்றது கர்நாடக அரசு
Updated on
2 min read

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமை யாவின் மனைவிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளை மைசூரு நகரமேம்பாட்டு கழகம் திரும்ப பெற்றது. இதனால் சித்தராமையா மீது போடப்பட்ட லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறை வழக்கு திரும்ப பெறப்படும் என தெரிகிறது.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. இதற்குமாற்றாக ரூ.62 கோடி மதிப்புள்ள 14 வீட்டு மனைகளை வழங்கியது. இந்த நிலத்தின் மதிப்பு கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதன் காரணமாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவர் மீது வ‌ழக்குப்பதிவு செய்துவிசாரிக்குமாறு லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டது. எனவே சித்தராமையா மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து அதிகாரிகள் பார்வதிக்கு ஒதுக்கப்பட்ட 14 வீட்டு மனைகளையும் அளந்து, பத்திரங்களை ஆராய்ந்த‌னர்.

இதனிடையே அமலாக்க துறை சித்தராமையா மீது நேற்றுமுன் தினம் பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது. இதனால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி பாஜகவினர் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் சித்தராமையாவின் மனைவி பார்வதி, தனக்கு ஒதுக்கப்பட்ட 14 வீட்டுமனைகளையும் திரும்ப ஒப்படைப்பதாக‌ மைசூரு நகர்ப்புற‌ மேம்பாட்டுகழகத்திடம் மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து மைசூரு நகர மேம்பாட்டு கழக இயக்குநர் ரகுநந்தன், பார்வதியின் கோரிக்கையை ஏற்பது குறித்து அரசுவழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். பத்திர பதிவு அதிகாரிகள் பார்வதியை சந்தித்து 14 வீட்டு மனைகளின் பத்திரங்களையும் பெற்றனர்.

பின்னர் ரகுநந்தன், ‘‘சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பார்வதிக்கு வழங்க‌ப்பட்ட 14 மனைகளும் திரும்ப பெறப்படுகின்றன. சம்பந்தப்பட்ட வீட்டு மனைகளின் கிரய பத்திரங்களை ரத்து செய்யப்படுகின்றன. இதனால் 14 வீட்டுமனைகளும் உடனடியாக எங்களது கட்டுப்பாட்டில் வந்துள்ளன'' என தெரிவித்தார்.

குமாரசாமி விமர்சனம்: மத்திய அமைச்சர் குமாரசாமி,‘‘சித்தராமையா தன்னை ஒரு புத்திசாலியாக நினைத்து கொண்டிருக்கிறார். திருடி விட்டு பொருளைதிருப்பி கொடுத்துவிட்டால் குற்றவாளியை தண்டிக்க மாட்டார்களா? சித்தராமையா போலீஸிடம் இருந்து தப்பினாலும், சாமுண்டீஸ்வரி அம்மனிடம் இருந்து தப்பிக்க முடியாது''என விமர்சித்தார்.

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, ‘‘அமலாக்கத் துறையின் வழக்குக்கு பயந்து சித்தராமையா நிலத்தை திரும்ப கொடுத்துள்ளார். இதன் மூலம் தன் மீதான தவறை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நாடகத்தை நிறுத்திவிட்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆளுந‌ரிடம் நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்'' என்றார்.

சித்தராமையாவின் மனைவி பார்வதி சர்ச்சைக்குரிய அந்த நிலத்தை ஒப்படைத்திருப்பதால், சித்தராமையா மீது போடப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வரும் என காங்கிரஸார் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த இரு மாதங்களாக அவருக்கு ஏற்பட்ட நெருக்கடி முடிவுக்கு வரும் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in